Published : 20 Jun 2022 08:55 PM
Last Updated : 20 Jun 2022 08:55 PM
கோவை: “மண் வளத்தை பாதுகாக்க சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள பயணம் தாய் பூமியைக் காப்பாற்றிய வரலாற்றில் எழுதப்படும்” என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 8-வது மாநிலமாக கர்நாடகா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதற்காக பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், “சத்குருவின் பயணத்தைப் பொறுத்தவரை, இது தாய் பூமியைக் காப்பாற்றிய வரலாற்றில் எழுதப்படும். இந்த இயக்கம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும், குறிப்பாக இப்போது இருக்கும் குழந்தைகளுக்கும், இனி பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் இந்த இயக்கத்தின் வெற்றி நன்மை பயக்கும்.
அரசு சார்பில் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமின்றி, ‘மண் காப்போம்’இயக்கத்தின் பரிந்துரையின்படி மண் வளத்தை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பேசுகையில், "இந்த இயக்கம் இன்றைய அவசியத் தேவை. மண் அதன் வளத்தை இழப்பதால் உணவு உற்பத்தி மற்றும் குடிநீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. உலக மக்களின் நலனுக்காக சத்குரு தொடங்கியுள்ள இந்த இயக்கத்தில், அனைத்து குடிமக்களும் பங்கெடுக்க வேண்டும்”என்றார்.
கர்நாடகா கல்வி துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் பேசுகையில், "நாம் பஞ்சபூதங்களை வணங்குகிறோம். ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம், சத்குரு அதை நினைவூட்டுகிறார். அவரின் பரிந்துரைப்படி, பள்ளிப் பாடத்திட்டத்தில் மண்ணின் முக்கியத்துவத்தை கல்வி அமைச்சகம் சேர்க்கும்" என்றார்.
சுகாதார துறை அமைச்சர் கே. சுதாகர் பேசும்போது, “நம் முந்தைய தலைமுறையினர் நமக்கு எதைக் கொடுத்தார்களோ, அதே தூய்மையான இயற்கையை நாமும் எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை சத்குருவின் செயல்கள் நமக்கு போதிக்கின்றன. மண் வளத்தை மீட்கும் இந்த அற்புதமான பணியால் உலகம் முழுவதையும் ஒரு இந்திய குரு இணைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
தனது பயணத்தைப் பற்றி சத்குரு பகிர்ந்து கொள்கையில், “இது ஒரு நீண்ட பயணம் மட்டுமல்ல, இது ஒரு நம்பமுடியாத செயலாகும். உலகம் முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் ஐரோப்பா, மத்திய ஆசியா, அரேபியா மற்றும் ஆப்பிரிக்கா வரையிலும் உள்ள அவர்கள் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவைப் பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நாங்கள் கடந்து சென்ற அனைத்து மாநிலங்களும், ஒவ்வொரு மாநிலமும் மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன" என்றார்.
சத்குரு மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தொடங்கிய தனது பயணத்தை தமிழ்நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்ய உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT