Published : 20 Jun 2022 09:33 AM
Last Updated : 20 Jun 2022 09:33 AM

’அக்னிபாதை வீரர்களுக்கு பாஜக அலுவலக பாதுகாப்புப் பணியில் முன்னுரிமை’ - கட்சிப் பிரமுகரின் பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தில் சேவையாற்றி வெளியேறும் அக்னிவீரர்களுக்கு பாஜக அலுவலக பாதுகாப்புப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா தெரிவித்துள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கைலாஷ் விஜயவார்கியா, "ஒரு அக்னிவீரர் 4 ஆண்டுகள் சேவையை முடித்து தனது 25 வது வயதில் வெளியே வரும்போது அவர் கையில் ரூ.11 லட்சம் இருக்கும். அவரை அக்னிவீரர் என்று அனைவரும் கொண்டாடுவர். பாஜக அலுவலகப் பாதுகாப்புப் பணிக்கு ஆள் வேண்டும் என்றாலும் கூட நான் அக்னிவீரருக்கு முன்னுரிமை அளிப்பேன்" என்றார்.

அவரது இந்தக் கருத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல் எதிர்ப்புக் குரல் கட்சிக்குள் இருந்தே கிளம்பியது. பாஜக எம்.பி. வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களை தங்களின் கட்சி அலுவலக பாதுகாப்பிற்கு அழைப்பவர்கள் அந்தக் கருத்தை அவர்களோடு மட்டும் வைத்துக் கொள்ளலாம்" என்று பதிவிட்டிருந்தார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட கைலாஷ் விஜய்வார்கியா தனது ட்விட்டரில் ஒரு விளக்கத்தைத் தெரிவித்தார்.
அதில், "அக்னிபாதை திட்டத்தில் வெளியே வரும் அக்னிவீரருக்கு தகுந்த பயிற்சி அளித்து அவர் விரும்பும் துறையில் அவரின் திறமை பயன்படுத்தப்படும். இதைத்தான் நான் சொல்லவந்தேன்" என்று கூறியுள்ளார்.

கிஷன் ரெட்டி சர்ச்சைப் பேச்சு: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, திறமையான பணியாளர்களை உருவாக்க பாதுகாப்புப் படை ஒரு பயிற்சிக் களமாக இருக்கும். அங்கே பயிற்சி பெற்றவர்கள் வாகன ஓட்டுநர்களாக, எலக்ட்ரீஷியன்களாக பணியாற்றலாம் என்று கூறியுள்ளார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "அக்னிவீரர்கள் வாகன ஓட்டுநர்களாகவும், சலவைத் தொழிலாளியாகவும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றுவது என்பது மாண்புமிகு சேவை. ராணுவத்தில் இணைவோர் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக வருகின்றனர். வாகன ஓட்டுநர்களாக இருக்க விரும்புவோர் எதற்காக 4 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும். அமைச்சரின் கருத்து பாஜக அக்னிவீரர்களை வெறும் செக்யூரிட்டியாகப் பார்க்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x