Published : 19 Jun 2022 06:51 AM
Last Updated : 19 Jun 2022 06:51 AM
தாராப்பூர்: நாட்டின் முதல் அணுமின் நிலையமான மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தாராப்பூர் அணுமின் நிலையம் 1969-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் ஒத்துழைப்புடன் இது நிர்மாணிக்கப்பட்டது. இங்கு தலா 160 மெகாவாட் திறனுள்ள 2 மற்றும் தலா 540 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகள் உள்ளன.
இவற்றில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கையாளப்படுகின்றன. அணுமின் நிலைய வளாகத்தில் பிரத்யேகமாக கட்டப்பட்ட தண்ணீர் நிரம்பிய 2 சேமிப்பு கட்டமைப்புகளில் இவை வைக்கப்பட்டுஉள்ளன.
இங்கு கதிரியக்க கசிவை கண்டறியும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. இதன் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் அவ்வப்போது கதிரியக்க பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் இந்த பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து ஆய்வு செய்கிறது.
தாராப்பூர் மையத்தின் பொறுப்பாளர் லட்சுமி கோபிதாஸ் கூறியதாவது: இங்கு 1990-ல் அமைக்கப்பட்ட முதலாவது சேமிப்பு மையத்தில் பயன்படுத்தப்பட்ட 2,453 எரிகோல்கள் இருப்பில் உள்ளன. 2012-ல் மற்றொரு சேமிப்பு மையம் அமைக்கப்பட்டது. 3,500 எரிகோல்கள் கொள்ளளவு கொண்ட இந்த மையத்தில் தற்போது 999 பயன்படுத்தப்பட்ட எரிகோல்கள் உள்ளன என்றார்.
பால்கான் மாவட்ட ஊராட்சி தலைவர் வைதேகி வாடான் கூறும்போது, “மிகுந்த பாதுகாப்புடன் அமைந்துள்ள இந்த சேமிப்புமையம் மற்றும் இங்குள்ள 4 அணுஉலைகளால் எவ்வித பாதிப்பும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் எழவில்லை. சுற்றுவட்டார பகுதி மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அவர்களது முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை அணுமின் நிலைய நிர்வாகம் செயல்படுத்துகிறது. தாராப்பூர் பகுதி தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது” என்று கூறினார்.
தாராப்பூர் அணுமின் நிலைய வளாக இயக்குநர் மனோஜ் ஜோஷிகூறும்போது, “இந்த அணுஉலையைச் சுற்றிலும் 20 மீனவ கிராமங்கள் உட்பட 44 கிராமங்கள் உள்ளன. அணுஉலைக்கு எதிராக எவ்வித எதிர்ப்போ, போராட்டமோ இங்கு இல்லை. அதற்கான தேவையும் எழவில்லை. காரணம் அணு உலையால் இப்பகுதி முன்னேற்றம் அடைந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பெருமளவுக்கு பயன்பெறுகின்றன” என்று தெரிவித்தார்.
2026-க்குள் அமைய வேண்டும்
இந்திய அணுசக்தி கழக ஆலோசகர் பாஸ்கர் பண்டிட் கூறியதாவது: கூடங்குளத்தில் முதலாவது அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிகோல்கள், அந்த அணு உலைக்கு உள்ளேயே சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடம் நிரம்பிவருகிறது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் அணுமின் நிலைய வளாகத்துக்குள் சேமிப்பு மையத்தை கட்டமைக்க வேண்டும். இதுபோல், 2-வது அணுஉலையில் பயன்படுத்திய எரிகோல்களை சேமிக்க மற்றொரு சேமிப்பு மையத்தை 2028-ம் ஆண்டுக்குள் அமைத்தாக வேண்டும். அப்படி கட்டாவிட்டால் மின்உற்பத்தியை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காமல் போகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT