Published : 19 Jun 2022 01:17 AM
Last Updated : 19 Jun 2022 01:17 AM

ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப் பொருட்களுக்கு தடை: மத்திய அரசு தீவிரம்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை தடைசெய்யும் பிரதமரின் அழைப்பை ஏற்று, ஜூன் 30, 2022-க்குள் கண்டறியப்பட்ட நெகிழிப் பொருட்களை தடை செய்யும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு தேவையான விரிவான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கச்சா பொருட்களின் விநியோகத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், நெகிழித் தேவையைக் குறைக்கும் முயற்சிகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, முறையான கண்காணிப்புக்கு டிஜிட்டல் இடையீடுகள், விழிப்புணர்வு மற்றும் உத்தரவுகளை முறையாக அமல்படுத்த மாநிலங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பலதரப்பு அணுகுமுறைகளை விரிவான செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பின்பற்றி வருகிறது.

நெகிழி கழிவு மேலாண்மை விதிகள் 2016- இன்படி, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களை சேமிக்கவும், விற்கவும் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நெகிழி கழிவு மேலாண்மை (திருத்தப்பட்ட) விதிகள் 2021-இன்படி, செப்டம்பர் 30, 2021 முதல் நெகிழி பைகளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 1, 2022 முதல் கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட உள்ளது:

* நெகிழி குச்சிகளுடனான இயர்பட்ஸ், பலூன்களுக்கான நெகிழி குச்சிகள், நெகிழி கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல்.

* தட்டுகள், கோப்பைகள், முள் கரண்டி, கரண்டி, கத்தி, உறிஞ்சு குழாய், தட்டம், இனிப்பு பொட்டலங்களை சுற்றும் படலம், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பிக்கெட், நெகிழி அல்லது 100 மைக்ரோன்களுக்கு குறைவாக உள்ள பி.வி.சி பதாகைகள், கிளறு குச்சிகள்.

கண்டறியப்பட்டுள்ள பொருட்களின் விநியோகத்தை தடுப்பதற்காக தேசிய, மாநில மற்றும் உள்ளூர் அளவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சிபெட் உடன் இணைந்து மாற்று வழிகள் குறித்த பயிலரங்கை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுபோன்ற நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் நடத்தி வருகின்றது. மதுரை, ராஞ்சி, குவஹாத்தியில் இந்த பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x