Published : 18 Jun 2022 06:44 PM
Last Updated : 18 Jun 2022 06:44 PM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி சனிக்கிழமை தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, தன்னுடைய தாயாருக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றார். நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தனது தாய் பற்றி பிரதமர் மோடியின் உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமது குழந்தைப் பருவத்தில் தாயுடன் செலவிட்ட சில சிறப்பு தருணங்களை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி அந்த பதிவில் கூறியிருப்பதாவது: “எனது தாய் திருமதி ஹீராபா மோடி, தமது 100-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை பகிர்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரது நூற்றாண்டு பிறந்த ஆண்டாக இருக்கப் போகிறது.
நெகிழ்தன்மையின் சின்னம்: எனது அன்னை எவ்வளவு அற்புதமானவரோ, அவ்வளவு எளிமையானவர். எல்லா தாய்மார்களையும் போல. என் பாட்டியின் முகத்தையோ, அல்லது அவர் மடியில் தவழும் சுகத்தையோ என் தாய் நினைவில் கொள்ளவில்லை. தாய் இல்லாமலேயே ஒட்டுமொத்த சிறுவயதையும் அவர் கழித்தார்.
வத் நகரில், எங்கள் குடும்பம் ஒரு ஜன்னல் கூட இல்லாத சிறிய வீட்டில் வசித்தது. கழிவறை அல்லது குளியல் அறை என்பது எங்களுக்கு ஆடம்பரமான ஒன்றாகும். மண்சுவரும், ஓட்டுக் கூரையும் கொண்ட இந்த ஒரு அறை குடியிருப்பை நாங்கள் எங்கள் வீடு என்று அழைத்தோம். எனது பெற்றோர், என் உடன்பிறந்தவர்கள் மற்றும் நான் உள்பட அனைவரும் அதில் தான் தங்கியிருந்தோம்.
வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ததோடு, குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காகவும் எனது தாய் சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவியதுடன், வீட்டு செலவுகளைச் சந்திப்பதற்காக சர்க்காவைச் சுற்றவும் நேரம் ஒதுக்கினார். மழையின்போது, எங்கள் வீட்டுக் கூரை ஒழுகி, வீடும் வெள்ளத்தால் நிறையும். நீர் சொட்டும் இடங்களில் மழை நீரை சேமிப்பதற்காக என் தாய் வாளிகளையும், பாத்திரங்களையும் அந்த இடங்களில் வைப்பார். இதுபோன்ற மோசமான நிலையிலும் நெகிழ்தன்மையின் சின்னமாக என் அன்னை விளங்குவார்.
தூய்மைப் பணியில் ஈடுபடுவோர் மீது ஆழ்ந்த மரியாதை: தூய்மை பழக்கவழக்கங்களுக்கு எனது தாய் எப்போதும் அதிக முக்கியத்துவம் அளிப்பார். தூய்மை மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபடுவோர் மீது எனது அன்னை ஆழ்ந்த மரியாதை கொண்டிருந்தார். வத்நகரில் தம் வீட்டின் அருகே இருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய யாரேனும் வரும் போதெல்லாம், எனது அன்னை அவருக்கு தேனீர் வழங்காமல் இருக்க மாட்டார்.
பிறரது மகிழ்ச்சியில் இன்பம் காணுதல்: பிறரது மகிழ்ச்சியில் தமது அன்னை இன்பம் காணுவார். அவருக்கு பரந்த மனம். என் தந்தையின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்தார். அவரது அகால மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் அப்பாசை என் தந்தை எங்கள் வீட்டிற்கு அழைத்துவந்தார். அவர் எங்களுடன் தங்கியிருந்து, தமது படிப்பை நிறைவு செய்தார். உடன்பிறந்தவர்களுக்கு செய்ததைப் போலவே, என் தாய் அப்பாசிடமும் பாசமாகவும், அக்கறையுடனும் இருந்தார். ஒவ்வொரு வருடமும் ஈத் பண்டிகையின் போது அவருக்குப் பிடித்த உணவு வகைகளை என் தாய் தயார் செய்வார். பண்டிகைகளின் போது, அன்னையின் சிறப்பு உணவுகளை ருசி பார்ப்பதற்காக அருகில் இருக்கும் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு வருவது வாடிக்கையாக இருந்தது
நான் பங்கேற்கும் எந்த அரசு அல்லது பொது நிகழ்ச்சிகளுக்கும், அம்மா என்னுடன் வந்ததில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடந்த காலங்களில் இரண்டே இரண்டு முறை மட்டும் அவர் நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளார். முதலாவதாக, ஏக்தா யாத்திரையை நிறைவு செய்த பிறகு, லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய பிறகு, அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் எனது நெற்றியில் தாய் திலகமிட்டார். இரண்டாவது நிகழ்ச்சி, 2001-ம் ஆண்டில் நடந்தது. 20 வருடங்களுக்கு முன், நான் குஜராத் முதல்வராக பதவியேற்ற விழாவில் தான் என் அம்மா என்னுடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் என்னுடன் எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
அன்னை கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடம்: இதற்கு முன் ஒரு சம்பவத்தை பற்றி கூற வேண்டும். நான் படித்த பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த உள்ளூர் ஆசிரியையான ஜெதாபாய் ஜோஷி ஜி வீட்டில் இருந்து யாராவது, நான் முதல்வராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்வார்களா என்று என் அம்மா கேட்டார். ஜெதாபாய் ஜோஷி ஜி தான் என் ஆரம்பகால ஆசிரியை, எனக்கு எழுத்துகளை கற்று தந்தார். அதனை என் அம்மா நினைவு வைத்திருந்தார்கள். ஜெதாபாய் ஜோஷி ஜி இறந்து விட்டதை நினைவுகூர்ந்த என் அம்மா, ஜெதாபாய் ஜோஷி ஜி குடும்பத்தில் இருந்து ஒருவரை என் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைத்திருந்தேன் என்பதை உறுதி செய்து கொண்டார்கள்.
முறையாக பள்ளிக்கு சென்று படிக்கா விட்டாலும், கற்றுக் கொள்வது சாத்தியம் என்பதை என் அம்மா நன்றாக உணர்ந்திருந்தார். என் அம்மாவின் சிந்தனைகளும், தொலைநோக்கு பார்வையும் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துவதாகவே இருந்திருக்கிறது.
கடமை உணர்வுமிக்க குடிமகன்: ஒரு நல்ல குடிமகனாக நான் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து என் அம்மா எப்போதும் எனக்கு சொல்லிக் கொண்டே இருப்பார். வாக்குப்பதிவு நடைமுறை தொடங்கிய நாளிலிருந்து என் அம்மா ஒருமுறை கூட வாக்களிக்க தவறியதில்லை. பஞ்சாயத்து தேர்தல்களிலிருந்து பாராளுமன்ற தேர்தல் வரை அவர் நிச்சயம் வாக்களிப்பார். சில தினங்களுக்கு முன், காந்திநகர் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களிலும் என் அம்மா வாக்களித்தார்.
எளிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல்: எனது அன்னை மிகவும் எளிமையான வாழ்க்கைமுறையை பின்பற்றுகிறார். அன்னையின் பெயரில் இன்று கூட எந்த சொத்துக்களும் இல்லை எந்த தங்க நகைகளை அவர் அணிந்தும் நான் பார்த்ததில்லை., அதில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை. முன்புபோலவே, தமது சிறிய அறையில் மிகவும் எளிமையான வாழ்க்கையை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார்.
தற்போதைய நிகழ்வுகளுடன் இணைந்திருத்தல்: உலக நிகழ்வுகளுடன் தமது அன்னை தொடர்ந்து இணைந்திருக்கிறார். அண்மையில் நான் என் தாயாரிடம், தினமும் எவ்வளவு நேரம் தொலைகாட்சியை பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், டிவியில் எல்லோரும் ஏதாவது காரணத்துக்காக அடிக்கடி சண்டை போட்டு கொண்டுள்ளனர் என்றும், செய்திகளை, அதிலும் அமைதியாக, விளக்கமாக வாசிக்கப்படும் செய்திகளை மட்டுமே தான் பார்ப்பதாகவும் அவர் கூறினார். என் அம்மா அனைத்து விஷயங்களையும் இவ்வளவு ஆழமாக கவனிப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
கூர்மையான நினைவாற்றல்: 2017-ம் ஆண்டு, காசியில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டு, அகமதாபாத் சென்றேன். அப்போது, கோயில் பிரசாதத்தை எடுத்து கொண்டு என் தாயாரை சந்திக்கச் சென்றேன். அவரை பார்த்ததும், உடனே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தாயா என்று என்னை கேட்டார். அவர் இப்போதும். காசி விஸ்வநாதர் மகாதேவ் என்று முழுப்பெயரையும் சரியாக சொல்கிறார். அப்போது என் அம்மா என்னிடம், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதைகள் இன்னும் அப்படியே இருக்கிறதா என்று கேட்டார். யாரோ ஒருவரின் வீட்டுக்குள் கோயில் இருப்பது போல் தோன்றுவதாக தெரிவித்தார்.
பிறரது விருப்பங்களுக்கு மரியாதை: தமது அன்னை, பிறரது விருப்பங்களுக்கு மரியாதை தருவதுடன், அவரது கருத்துகளைப் புகுத்துவதை தவிர்ப்பார். என் விஷயத்திலேயே, எனது முடிவுகளை அவர் மதித்ததோடு, எந்த தடங்கலும் செய்யாமல், என்னை ஊக்கப்படுத்தினார். என்னுள் வேறுபட்ட மனநிலை உருவாகி வருவதை சிறுவயதிலேயே அவரால் உணந்துகொள்ள முடிந்தது
நான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, எனது அன்னை அதற்கு முழு ஆதரவளித்தார். எனது விருப்பங்களைப் புரிந்துகொண்டு, “உன் மனம் சொல்வது போல் செய்” என்று கூறி எனக்கு ஆசி வழங்கினார்.
ஏழைகள் நலனில் அக்கறை: ஏழைகள் நலனில் வலுவான உறுதிப்பாடு கொள்ளவும், கவனம் செலுத்தவும் அன்னை எப்போதும் தம்மை ஊக்குவித்தார். குஜராத்தின் முதலமைச்சராக நான் ஆவது என்று முடிவெடுக்கப்பட்ட போது நான் மாநிலத்திலேயே இல்லை. குஜராத்திற்கு திரும்பியதும் நேராக எனது தாயாரை சந்திக்க சென்றேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என்னிடம் மீண்டும் நான் அவருடன் தங்கப்போகிறேனா என்று ஆர்வத்துடன் விசாரித்தார்கள். ஆனால் அவர்களுக்கு நான் என்ன பதில் கூறப்போகிறேன் என்பது நன்றாகவே தெரியும். அதனால் அரசில் உனது பணி குறித்து எனக்கு தெரியாது. ஆனாலும் எந்த காரணத்தை கொண்டும் லஞ்சம் மட்டும் வாங்காதே என்று கூறினார்.
தம்மைப் பற்றி கவலைப்படாமல் மிகப்பெரிய பொறுப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று தாய் கூறிக் கொண்டே இருப்பார். தொலைபேசி வாயிலாக அவருடன் பேசும்போதெல்லாம், “எந்த தவறான காரியத்தையோ அல்லது பிறருடன் தவறான செயல்களையோ செய்யாமல், ஏழைகளுக்காக தொடர்ந்து பணியாற்று”, என்றே தெரிவிப்பார்.
கடின உழைப்பு- வாழ்க்கையின் தாரக மந்திரம்: நேர்மையும், சுயமரியாதையும் தான் எனது பெற்றோரின் மிகப்பெரிய குணநலன்கள். வறுமை மற்றும் அது சார்ந்த சவால்களுடன் போராடிய போதும், நேர்மையின் வழி தவறியோ அல்லது தங்களது சுயமரியாதையை விட்டுக் கொடுத்தோ எனது பெற்றோர் செயல்படவில்லை. தொடர்ச்சியான கடின உழைப்பு தான் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் அவர்களது தாரக மந்திரமாக இருந்தது.
மாத்ரு சக்தியின் சின்னம்: என் அன்னையின் வாழ்க்கைப் பயணத்தில், இந்திய பெண்களின் தவம், தியாகம் மற்றும் பங்களிப்பை நான் காண்கிறேன். அன்னை மற்றும் அவரைப் போன்ற கோடிக்கணக்கான பெண்களை நான் பார்க்கும் போதெல்லாம், இந்திய பெண்களால் சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை என்பதை உணர்கிறேன்.
ஒவ்வொரு வறுமைக்கதைக்கு பின்னாலும், ஒரு அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம் ஒளிந்திருக்கிறது.
ஒவ்வொரு சவாலுக்கும் பின்னே ஒரு அன்னையின் உறுதியான முடிவு ஒளிந்திருக்கிறது.
அம்மா, உங்களுக்கு மிக மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களைப்பற்றி விரிவாக பொதுவெளியில் எழுதும் துணிச்சல் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை.
அம்மா உங்களது ஆரோக்கியமும், நலனும் சிறந்திருக்க நான் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
எங்களது அனைவருக்கும் உங்களது ஆசிர்வாதங்களை வேண்டி நிற்கிறேன்.
உங்கள் காலடியில் தலைவணங்குகிறேன்!"
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT