Published : 18 Jun 2022 10:05 PM
Last Updated : 18 Jun 2022 10:05 PM
நடப்பாண்டில் 40,000 பேருக்கு ராணுவத்தில் வேலை தரப்படும். இந்தத் திட்டத்திற்கு ‘அக்னி பாதை’ எனப் பெயர் சூட்டப்படும். இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் ‘அக்னி வீரர்கள்’ என்றழைக்கப்படுவர். இப்படியோர் அறிவிப்பை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தனர்.
இந்தத் திட்டம் ராணுவத்தில் ஒரு புரட்சி. இதற்காக 8 நாடுகளில் உள்ள நடைமுறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் ராணுவத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாகும். துடிப்புமிகு இளைஞர்களே நமக்குத் தேவை. புத்தாக்க சிந்தனையுடன், புதிய தொழில்நுட்ப உத்திகளுடன் இளைஞர்கள் வருவார்கள். இளைஞர்கள் நாட்டுக்கு சேவைசெய்ய இது நல்ல வாய்ப்பு என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விவரித்தனர். இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றே மத்திய அரசு எதிர்பார்த்தது.
ஆனால், நடப்பது என்னவோ முற்றிலும் வேறாக இருக்கிறது. நாடு முழுவதும், கடந்த 4 நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பிஹாரில் தொடங்கிய வன்முறை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு எனப் பல மாநிலங்களிலும் பரவியுள்ளது. தெலங்கானாவில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
ஒரு புதிய திட்டம், ஆண்டுக்கு சுமார் 40,000 வேலைவாய்ப்பு தரும் திட்டம். அப்படியிருந்தும், மத்திய அரசின் ‘அக்னி பாதை’ திட்டத்தை இளைஞர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கின்றனர் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
இதற்கு இளைஞர்கள் 3 முக்கியக் காரணங்களைக் கூறுகின்றனர்.
1. நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி
2. ஓய்வூதியம் இல்லை
3. வயது வரம்பு
இவைதான் அவர்கள் முன்வைக்கும் முக்கியக் காரணங்கள்.
இந்த கெடுபிடிகள் குறித்து பிஹார் மாநில இளைஞர் ஒருவர், "நான் எனது 16-வது வயதிலிருந்து ராணுவத்தில் சேரத் தயாராகி வருகிறேன். இதற்காக உடற்தகுதியை வளர்த்து வருகிறேன். தேர்வு எழுதவும் தயாராகி வருகிறேன். ஆனால், இத்தனையும் செய்து நான் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க முடியும் என்றால், என் எதிர்காலம் கேள்விக்குறியாகாதா? நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் எனது ஒப்பந்தம் முடிந்த பிறகு என்ன மாதிரியான கல்வித் தகுதியை நான் மேம்படுத்திக் கொள்ள முடியும்?" என்று வினவினார்.
அதேபோல் “ஓய்வூதியம் இல்லை என்பதும் ராணுவ வேலையின் மீதான இளைஞர்களின் கனவைத் தகர்க்கும் என்று கூறுகின்றனர். 21 வயதை உச்ச வரம்பாக வைத்ததும் பலரையும் தேர்வு எழுத தகுதியற்றவர்களாக்கும்” என்றனர்.
இதை முன்வைத்தே போராடுகின்றனர். போராட்டம் நெருப்புபோல் பரவியுள்ள சூழலில், மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
அதாவது, கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்புப் படைகளில் ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் சேருவதற்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. சிஏபிஎஃப், அசாம் ரைபில்ஸ் என துணை ராணுவப் படைகளில் சேர முன்னுரிமை அளிக்கப்படும். 10% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.
ஆனால், இந்த சமாதானங்கள் எதையும் இளைஞர்கள் ஏற்பதாக இல்லை. பழைய முறையிலேயே ராணுவத்திற்கு ஆள்சேர்க்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் நிற்கின்றனர்.
அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கண்டனக் குரல்களைப் பதிந்து வருகிறது. முதன்முதலில் ராகுல் காந்தி தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்தார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள். அக்னி பாதை என்ற திட்டத்தின் மூலம் அக்னி பரீட்சை செய்யாதீர்கள் என்றார். தொடர்ந்து இடதுசாரிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி எனப் பல்வேறு கட்சியினரும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
உச்சபட்ச தியாகத்தை கோரும் ராணுவ பணியினை எந்தவித வேலை பாதுகாப்பும் இல்லாமல் மேற்கொள்ள இளைஞர்களை அழைப்பது பெருங்குற்றம். தேசத்தின் பாதுகாப்பையும், ராணுவத்தின் தீரத்தையும் ஒரு சேர அவமதிக்கும் அக்னி பாதை திட்டத்தை திரும்பபெற வேண்டும் என்பதே அரசியல் தலைவர்களின் வலியுறுத்தலாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ஆனால், இத்தனைக்கும் இடையே, அக்னி பாதை திட்டத்தின் கீழ் முதல் படையினருக்கான ஆள்சேர்ப்பு விரைவில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வீடியோ வடிவில் இங்கே...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT