Published : 17 Jun 2022 09:11 AM
Last Updated : 17 Jun 2022 09:11 AM

அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு: பிஹாரில் இன்றும் தொடரும் வன்முறை; மேலும் 2 ரயில் பெட்டிகளுக்கு தீ

பிஹாரில் இன்று காலை எரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள்.

பாட்னா: அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் இன்றும் 2 ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாள் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்த நிலையில், பிஹாரில் இன்றும் பதற்றம் நீடிக்கிறது.

ஹாஜிபுர் பரூனி ரயில்வே பாதையில், ஹொஹிதீன் நகர் ரயில் நிலையத்தில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பிஹார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் இப்போது பாஜக ஆளும் ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பிஹாரின் ஆரா, ஹரியாணாவில் பல்வால், உ.பி.யின் ஆக்ரா, மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், இந்தூர் ஆகிய பகுதிகள் மற்றும் ராஜஸ்தானின் சில நகரங்கள் பதற்றம் நிறைந்தவையாக அறியப்பட்டுள்ளன. இருப்பினும், பிஹாரில் தான் ரயில் பெட்டிகள் எரிப்பு, வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி உடைப்பு, சாலைகளில் டயர் எரிப்பு என வன்முறைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இதனால் ரயில் சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

‘இந்தியன் ஆர்மி லவ்வர்ஸ்’ : நேற்று, பிஹாரின் கைமூர் மாவட்டத்தில்உள்ள பஹாபுவா ரயில் நிலையத்தில் கம்புகளுடன் புகுந்த இளைஞர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். ரயில் பெட்டி ஒன்றுக்கும் அவர்கள் தீ வைத்தனர். ‘இந்தியன் ஆர்மி லவ்வர்ஸ்’ என்ற பேனரை கையில் வைத்திருந்த இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெறக் கோரி கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இன்று காலை, உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று ரயிலை சூறையாடியதோடு ரயில் நிலைய சொத்துக்களையும் சேதப்படுத்தியது. அதில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அக்னி பாதை அறிவிப்பும், எதிர்ப்பும்: ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த புதிய கொள்கையை பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்னி பரீட்சை வேண்டாம்: அக்னிபாதை திட்டம் குறித்து பாஜக.,வை விமர்சித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "பதவி இல்லை, ஒய்வூதியம் இல்லை, 2 ஆண்டுகளுக்கு நேரடி ஆட்தேர்வு இல்லை. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை. ராணுவத்துக்கு மரியாதை இல்லை. வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களின் குரலை கேளுங்கள். இளைஞர்களை அக்னி பாதையில் நுழைக்கும் அக்னி பரீட்சையை மேற்கொள்ள வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அக்னி பாதையில் ஆள்சேர்ப்புக்கான வயது வரம்பை 23 ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x