Published : 17 Jun 2022 06:04 AM
Last Updated : 17 Jun 2022 06:04 AM

அக்னி வீரர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: அக்னி பாதை திட்டம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள், குழப்பங்களுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் அக்னிபாதை திட்டம் குறித்து எழுந்துள்ள கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கான விளக்கம் பாதுகாப்புத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் பின்வருமாறு:

பாதுகாப்புத்துறையில் 4 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் விடுவிக்கப்படும் அக்னி வீரர்கள் தொழில் தொடங்க நினைத்தால் அவர்களுக்கு நிதியுதவியும், வங்கிக் கடனுதவியும் அரசுத் தரப்பில் செய்து தரப்படும். மேற்படிப்புபடிக்க நினைப்பவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழும், மேற்படிப்புக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும்.

மேலும், மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) மற்றும் மாநில போலீஸ்துறையில் சேர விரும்புபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்ற துறைகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

அதேநேரத்தில் ராணுவத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அக்னி பாதை திட்டம் மூலமாக குறையாது. ராணுவத்தில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கான வாய்ப்பு இதன் மூலம் அதிகமாகும்.

தற்போது முப்படைகளில் சேர்க்கப்படும் இளைஞர்கள் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமான இளைஞர்கள் வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் சேர்க்கப்படுவார்கள். இதனால் அக்னி வீரர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

இதன்மூலமாக ராணுவத்தில் உள்ள குழு (ரெஜிமெண்ட்) ஒற்றுமை மற்றும் வீரர்களுக்கு இடையேயான பந்தம் குறையாது. ராணுவத்தில் உள்ள ரெஜிமெண்ட் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அக்னி பாதைத் திட்டம் மூலமாக ரெஜிமெண்ட் உறுப்பினர்களுக்கு இடையேயான பந்தம் இன்னும் அதிகமாகும். இது படையின் ஒற்றுமையை வலுவாக்கும்.

அக்னிபாதை திட்டத்தால் முப்படைகளின் செயல்திறன் குறையாது. பாதுகாப்புத்துறையில் இதுபோன்ற குறுகிய கால பணிவாய்ப்புகள் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன. இது இளமையான செயல்திறன் மிக்க ராணுவத்தை உண்டாக்கும் முறை என்று உலக அளவில் நிரூபிக்கப்பட்டது.

முதல் ஆண்டு அக்னி பாதைத் திட்டம் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஒட்டுமொத்த ராணுவத்தின் 3 சதவீதம் மட்டுமே.

4 ஆண்டுகள் முடிந்த பின்னர் சோதனைகளுக்குப் பிறகே மீண்டும் ராணுவத்தில் அக்னி வீரர்கள் சேர்க்கப்படுவர். இதன் மூலம் அதிகாரி நிலை பணிக்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் கிடைப்பார்கள்.

உலக அளவில் பல ராணுவங்கள் அந்நாடுகளின் இளைஞர்களை நம்பியே உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனுபவம் வாய்ந்த, வயதில் மூத்த வீரர்களின் எண்ணிக்கையை விட இளம் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அக்னி வீர்கள் சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிப்பவர்களாக மாறிவிடுவார்களா? தீவிரவாத இயக்கங்களில் இணைந்துவிடுவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது இந்திய பாதுகாப்புப் படையின் மதிப்புக்கும், மாண்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் கேள்வி. 4 ஆண்டுகள் சீருடை அணிந்த இளைஞர்கள் நாட்டுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணிப்பவர்களாக மாறி வெளிவருவார்கள்.

இந்த திட்டத்தை வடிவமைத்ததே ராணுவ அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட தனிப்பிரிவுதான். அதை உருவாக்கியது மத்திய அரசு. பல முன்னாள் அதிகாரிகள் இதை வரவேற்றுள்ளனர். இவ்வாறு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x