Published : 16 Jun 2022 01:43 PM
Last Updated : 16 Jun 2022 01:43 PM
லக்னோ: காவல்துறையில் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவல்துறை மற்றும் அது சார்ந்த துறைகளில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம் என அறிவித்தது.
ஆனால், அக்னி பாதை திட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராணுவத்தில் சேர்வதைக் கனவாகக் கொண்டு தயாராகும் இளைஞர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிஹாரில் பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் வன்முறைச் சம்பவங்களாக மாறியுள்ளன.
நேற்றே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து 4 ஆண்டு பணியை முடிக்கும் அக்னி வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் சேர முன்னுரிமை வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் காவல்துறையில் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கூறியுள்ளார்.
ஆனால், 4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் என்ன வேலை செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்பி நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிஹார் வன்முறை உ.பி., மத்தியப்பிரதேசத்துக்கும் பரவும் என அஞ்சப்படும் சூழலில் யோகி ஆதித்யநாத் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT