Published : 16 Jun 2022 05:44 AM
Last Updated : 16 Jun 2022 05:44 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை, ‘கலவரக்காரர்களுக்கு திருப்பித் தரப்படும் பரிசு’ என பாஜக எம்எல்ஏ ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்தது சர்ச்சையாகியுள்ளது.
பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மா, முஸ்லிம்களின் இறைத் தூதரான முகம்மது நபியை விமர்சித்திருந்தார். இதை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை உ.பி.யின் சஹரான்பூரில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.
இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்த சஹரான்பூர் போலீஸார் தடியால் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி கைப்பேசிகளில் பதிவு செய்யப்பட் டுள்ளது.
இப்பதிவை, உ.பி.யின் தியோரியா தொகுதி பாஜக எம்எல்ஏவான ஷலாப் மணி திரிபாதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 1998 முதல் பிரபல இந்தி நாளேடுகளில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய இவர், இந்தி ஊடகம் ஒன்றில் 2016 வரை தலைமைப் பதவியில் இருந்தார்.
2016-ல் பாஜகவில் இணைந்த இவர் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளராக அமர்த்தப்பட்டார். இவர், முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்படும் பதிவை, ‘கலவரக்காரர்களுக்கு திருப்பித் தரப்படும் பரிசு’ என்ற தலைப்பில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
மேலும் அந்தப் பதிவை பாஜகவினர் பலர் பழிவாங்கும் படலம் எனக் குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர். போலீஸ் காவலில் விசாரணையின் பெயரில் தாக்குதல் நடத்துவது சட்டவிரோதமாகும். இந்தச் சூழலில் எந்த சட்டவிதி பற்றியும் கவலைப்படாமல் சஹரான்பூர் போலீஸார் உள்நோக்கத்துடன் வீடியோ பதிவு செய்யவே முஸ்லிம் இளைஞர்களை தாக்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இதில் தாக்கப்படுபவர் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் என சஹரான்பூரின் முஸ்லிம் குடும்பத்தினர் பலர் உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் கண்ணீருடன் புகார் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான முகம்மது சைப் என்பவரின் சகோதரி ஜைபா கூறும்போது, “எனது சகோதரனை நிற்க கூட முடியாத அளவுக்கு போலீஸார் தாக்கியுள்ளனர். இதை காட்சியாகப் பதிவாக்கி கொஞ்சமும் இரக்கமின்றி சமூக வலைதளங்களில் வைரலாக்கி மகிழ்கின்றனர். காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை” என்றார்.
கண்காணிப்பு கேமரா
போலீஸ் காவலில் இதுபோன்று தாக்குதல் நடத்துவது சட்டப்படி குற்றம் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. இதை தடுக்க நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து, நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய குற்றப் பதிவு ஆவணத்தின்படி கடந்த வருடம் உத்தர பிரதேசத்தில் தான் போலீஸ் காவலில் தாக்கப்படுவோர் மரணம் அதிகமாக உள்ளது.
புகார் வரவில்லை
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து சஹரான்பூர் மாவட்ட எஸ்எஸ்பி ஆகாஷ் தோமர் கூறும் போது, “இந்த வீடியோ பதிவு சஹரான்பூரில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன்மீது இதுவரை எங்களிடம் எந்தப் புகாரும் வரவில்லை” என்றார்.
இதனிடையே உ.பி.யின் அலகாபாத் கலவரத்தின் முக்கிய குற்றவாளியான ஜாவீதின் குடியிருப்பு இடிக்கப்பட்டது போல் சஹரான்பூரிலும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதில் 93 குற்றவாளிகளின் குடியிருப்பு குறித்து சஹரான்பூர் மாவட்ட அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT