Published : 15 Jun 2022 05:42 PM
Last Updated : 15 Jun 2022 05:42 PM
ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 'சின்னு' எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா தெற்கு பஞ்சாயத்தை சேர்ந்தவர் சி.என்.பிஜு குமார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் வாங்கி கோழிப் பண்ணை அமைக்கும் நோக்கில் 23 BV380 ஹைபிரிட் ரக கோழிகளை வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு கோழி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் அசதியாக இருந்துள்ளது. அதனை கவனித்த பிஜு கூட்டிலிருந்து அதை எடுத்து, தனியாக விட்டுள்ளார். பின்னர் அந்தக் கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்துள்ளார். அதையடுத்து காலில் வலி நிவாரணி தடவி விட்டுள்ளார் அவர்.
பின்னர் அன்றைய தினமே காலை 8.30 தொடங்கி மதியம் 2.30 மணி வரையில் தொடர்ச்சியாக 'சின்னு' கோழி முட்டைகளை இட்டு வந்துள்ளது. அந்தச் செய்தியை அறிந்து பிஜு வீட்டிற்கு பலரும் வருகை தந்து, கோழியை பார்த்துள்ளனர். ஊரார் கூடியிருக்க அவர்கள் முன்னிலையில் அந்தக் கோழி முட்டை இட்டுள்ளது.
இந்தச் செய்தி குறித்து அறிந்த கால்நடை மருத்துவர்களும் கோழியை வந்து பார்வையிட்டுள்ளனர். "இது மிகவும் அரிதான ஒன்று. அந்த கோழி தொடர்ச்சியாக முட்டையிட்டது ஏன் என்பதை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார் கால்நடை மருத்துவக் கல்வி பேராசிரியர் பினோஜ் சாக்கோ. பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரே சமயத்தில் அதிகளவிலான முட்டையை இட்ட கோழிக்கு அதன் உடலில் இருந்து கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் போன்ற சக்திகள் பெருமளவு குறைந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இது தவிர அதற்கு உடல் அளவிலும் சிரமம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT