Published : 15 Jun 2022 06:43 AM
Last Updated : 15 Jun 2022 06:43 AM
புதுடெல்லி: காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது.
அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் கரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது.
இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் நிலவும் காற்று மாசுவை பார்த்தால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் குறையும். காற்று மாசுவின் அதிக பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளில்தான் காணப்படுகிறது.
1998-ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் சராசரி காற்று மாசு ஆண்டுக்கு 61.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் சர்வதேச ஒப்பீடுகளை கணக்கில் கொள்ளும் போதும் இந்தியாவின் அதிக மக்கள் தொகையும் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் டெல்லி, பிஹார், உத்தரபிரதேச மாநிலங்களில்தான் மிக மோசமான காற்று மாசு பிரச்னை உள்ளது.
தற்போதைய நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தர பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பிஹார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும்.
மொத்தத்தில் காற்று மாசு காரணமாக சராசரியாக இந்தியர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment