Published : 13 Jun 2022 05:52 PM
Last Updated : 13 Jun 2022 05:52 PM
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். பட்டமளிப்பு விழாவும் ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. அதேபோல் துணைவேந்தரை நியமிப்பதிலும் ஆளுநர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் தமிழகம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் மாநில ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் ஆளுநருக்கு பதிலாக முதல்வரை பல்கலைக்கழக வேந்தர்களாக நியமனம் செய்ய இந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் இடைய ஏற்கெனவே மோதல் இருந்து வருகிறது. பல்வேறு விஷயங்களில் எதிரெதிராக செயல்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்குவங்கத்தில் சுகாதாரத்துறை, வேளாந்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறைகளின் கீழ் மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்து விதமான பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்கும் மசோதாவுக்கு அண்மையில் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
மேற்குவங்கத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 17 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதற்கு தற்போது ஆளுநர் வேந்தராக செயல்படுகிறார். இதனை மாற்றி தற்போது சட்டம் கொண்டு வரப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT