Published : 12 Jun 2022 11:11 PM
Last Updated : 12 Jun 2022 11:11 PM
பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு பிரதான காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் ஜாவேத் முகமது வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டு இருந்ததாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். ஜாவேத், அஃப்ரீன் பாத்திமாவின் தந்தை. அவரது வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து உள்நாடு, வெளிநாடு என பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த வெள்ளி (ஜூன் 10) அன்று பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ ஆகிய 6 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 130-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதில் பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு பிரதான காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாவேத் முகமது வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதன் மூலம் போலீசார் இதனை தெரிவித்துள்ளனர். சோதனையின் போது ஆட்சேபனைக்குரிய கருத்துகள் அடங்கிய போஸ்டர்களும் இருந்ததாக தெரிவித்துள்ளனர். சோதனைக்கு பிறகு அவரது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
>"12 போர் பிஸ்டல் மற்றும் 315 போர் பிஸ்டல் துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், நீதிமன்றத்துக்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துகள் அடங்கிய போஸ்டர்களும் இருப்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டது" என என்று காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் அஜய் குமார் தெரிவித்தார்.
>சோதனையை தொடர்ந்து வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்டது.
>சட்டவிரோதமாக அவரது வீட்டின் தரை மற்றும் முதல் தளம் கட்டப்பட்டு இருந்ததாக நோட்டீஸ் ஜூன் 12 (ஞாயிறு) அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை அவரது வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டது. கடந்த மே மாதம் அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு அவர் பதில் ஏதும் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம்.
>ஜாவேத்தின் மகள் அஃப்ரீன் பாத்திமா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஆவார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவியும் ஆவார்.
>முன்னதாக, சஹாரன்பூர் பகுதியில் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரது வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. கடந்த 3-ஆம் தேதி கான்பூர் வன்முறையை தொடர்ந்து அந்த வழக்கில் சிக்கியர்வர்களது வீடுகளும் இடிக்கப்பட்டன. அந்த மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக குண்டர்கள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக அவர்களின் சொத்துகள் ‘புல்டோசர்' மூலம் இடிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
>வீடுகள் இடிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார் பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் காத்ரி.
>"சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக அரசு நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நோட்டீஸ் கொடுப்பது உட்பட அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜாவேத் முகமது விஷயத்திலும் நாங்கள் இந்த நடைமுறையை பின்பற்றினோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
>முகமது ஜாவேதின் வீட்டை இடித்தது சட்டத்திற்கு புறம்பான செயல் என வழக்கறிஞர்கள் குழு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த வீடு அவரது மனைவி பெயரில் உள்ளது என்றும். எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
>குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை இடிக்கும் விவகாரம் தொடர்பாக மூன்று தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில மூத்த காவல்துறை அதிகாரி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT