Published : 11 Jun 2022 07:00 AM
Last Updated : 11 Jun 2022 07:00 AM

'உங்கள் தகவலுக்கு, இது எம்எல்ஏவின் கார்' - காவலர், பத்திரிகையாளரை தாக்கிய பாஜக எம்எல்ஏவின் மகள்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளியின் மகள் ரேணுகா (26). இவர் பிஎம்டபுள்யூ காரில் பெங்களூருவில் உள்ள குயின்ஸ் சாலையில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் போலீஸ் அதிகாரியின் வாகனத்தை முந்திக்கொண்டு சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, ''இந்த காரின் மீது 13 வழக்குகள் உள்ளன. இப்போது 14-வது முறையாக போக்குவரத்து விதிமுறை மீறப்பட்டிருக்கிறது’’ எனக்கூறி அபராதம் கேட்டனர்.

ஆனால், ரேணுகா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் போக்குவரத்து காவலரை தாக்கிய அவர், இதனை படம் பிடித்த கன்னட சேனலின் பத்திரிகையாளரையும் கன்னத்தில் அறைந்தார்.

அங்கு வந்த சட்டம் ஒழுங்கு போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா அபராதத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றார். இது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளி கூறுகையில், ‘‘பத்திரிகையாளர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முன்னதாக, அந்த வீடியோவில், "இது எம்எல்ஏவின் கார். உங்கள் தகவலுக்கு, இது ஒரு எம்எல்ஏ கார். இது என்னுடைய கார் அல்ல. நான் எனது வாகனத்தை வேகமாக ஓட்டவில்லை. உங்களுக்கு அரவிந்த் லிம்பாவலியை தெரியுமா? நான் அவருடைய மகள். அவ்வளவுதான்" என்று பேசுவது தெளிவாக பதிவாகி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x