Published : 10 Jun 2022 05:16 PM
Last Updated : 10 Jun 2022 05:16 PM
புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதர் முகம்மது நபியை பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் விமர்சித்திருந்தனர். இதனால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. அதேசமயம், நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரும் கட்சி நடவடிக்கைக்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த இருவர் மீதும் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் வாரணாசி, கியான்வாபி மசூதி கள ஆய்வில் காணப்பட்ட சிவலிங்கம் மீதும் பலர் ஆட்சேபனைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர். பெண் பத்திரிகையாளரான சபா நக்வீ தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்சேப கருத்தை பதிவு செய்திருந்தார். இவரைபோல முஸ்லிம் முக்கியப் பிரமுகர்களான மவுலானா முப்தி நதீம், ஷாதாப் சவுகான், அப்துல் ரஹ்மான், குல்சார் அன்சாரி, முற்போக்கு சிந்தனையாளரான அனில் குமார் மீனா ஆகியோரும் ஆட்சேபக் கருத்துகளை தெரிவித்தனர்.
இதனால் இந்த 6 பேர் மீதும் டெல்லி போலீஸார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இவர்களுடன் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டாலையும் சேர்த்து 8 பேரை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்குகள் டெல்லி காவல்துறையின் இஃப்சோ (Intelligence Fusion and Strategic Operation) எனும் சிறப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
இந்த 8 பேருடன் பல்வேறு மதங்களை சேர்ந்த பலர் மீதும் மதநல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலான பேச்சுக்களுக்காக வழக்குகள் பதிவாகி வருவதாக தெரிகிறது. இதற்காக சமூக வலைதளங்களையும் டெல்லி சிறப்பு போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நூபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை விமர்சித்த எஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசதுத்தீன் ஒவைசி மீது டெல்லி சிறப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து டெல்லி நாடாளுமன்ற சாலையில் ஒவைசியின் ஆதரவாளர்கள் நேற்று கண்டன ஊர்வலம் நடத்த முயன்றனர். டெல்லி அருகிலுள்ள காஜியாபாத்தின் தாஸ்னா தேவி மடாதிபதி யத்தி நரசிம்மாணந்த் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது.
ராஜஸ்தானில் மிரட்டல்
பாஜகவினர் விமர்சனத்தை கண்டித்து ராஜஸ்தானின் பண்டியில் முஸ்லிம்கள் கண்டனஊர்வலம் நடத்தினர். இதற்கு தலைமை ஏற்ற மவுலானா முப்தி நதீம், தங்கள் இறைத்தூதர் முகம்மது நபியை விமர்சித்தவர்களை கைது செய்துநடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதை செய்யவில்லை எனில் இறைத்தூதரை விமர்சித்தவர் கண்களை தோண்டி எடுப்பதுடன் கைகளையும் வெட்டப்போவதாக மிரட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT