Published : 10 Jun 2022 10:17 AM
Last Updated : 10 Jun 2022 10:17 AM

சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கு எதிராக வழக்கு: மத்திய அரசு, சிபிஐ-க்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மும்பை: சிபிஐ இயக்குநரக ஐபிஎஸ் அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் சிபிஐ, மத்திய அரசு மற்றும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1985-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியும் மகராஷ்டிர காவல்துறை இயக்குநர் பணி அனுபவம் கொண்டவருமான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு மே மாதம் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்துக்கு எதிராக மகராஷ்டிர காவல் துறையின் முன்னாள் கூடுதல் ஆணையர் ராஜேந்திர திரிவேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், "சிபிஐ அதிகாரியாக நியமிக்கப்படும் ஒருவர் மித மூத்த அதிகாரியாகவும் அசைக்கமுடியா நம்பகத் தன்மையும் ஊழல் வழக்கு விசாரணையில் அனுபவமும் கொண்டவராக இருக்க வேண்டும்.ஆனால் ஜெய்ஸ்வால் தனது பதவிக்காலத்தில் ஒருமுறைகூட ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றவில்லை. இது டெல்லி காவல் துறை சட்டத்துக்கு எதிரானது.

2002-ல் போலி முத்திரைத்தாள் வழக்கை விசாரிக்க, அப்போது டிஐஜியாக இருந்த ஜெய்ஸ்வால் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெய்ஸ்வால் உச்ச நீதிமன்ற கண்டிப்புக்கு ஆளானார். பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனவே ஜெய்ஸ்வால் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இதுதவிர ஜெய்ஸ்வாலுக்கு எதிராக 2012-ல் தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிலுவையில் இருப்பதால் பிரமாணப் பத்திரம் ஒன்றையும் திரிவேதியின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

திரிவேதியின் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதிதீபங்கர் தத்தா, நீதிபதி எம்.எஸ். கார்னிக் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு ஜூலை 18-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐ, மத்திய அரசு மற்றும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை ஜூலை 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x