Published : 10 Jun 2022 08:12 AM
Last Updated : 10 Jun 2022 08:12 AM

அவதூறு கருத்து பற்றி ஈரான் அமைச்சர் பேசினாரா? - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்தோலியான் டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் சந்தித்துப் பேசினார். அப்போது, ஈரானில் இந்தியா கட்டமைத்து வரும் சாபஹார் துறைமுகம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

சர்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அந்த நாட்டில் அமைதி திரும்ப வேண்டும் என்று இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்பின்போது முகமது நபி குறித்து அவதூறு கருத்து கூறப்பட்ட விவகாரத்தை ஈரான் அமைச்சர் எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி நேற்று கூறும்போது, "அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது முகமது நபி விவகாரத்தை ஈரான் அமைச்சர் எழுப்பவில்லை" என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முன்னதாக ஈரான் அமைச்சர் அமீர் கூறும்போது, "அவதூறு விவகாரத்தில் இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் திருப்தி அடைந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x