Published : 09 Jun 2022 06:32 AM
Last Updated : 09 Jun 2022 06:32 AM
புதுடெல்லி: விமான நிலையங்களிலும், விமானத்தின் உள்ளேயும் பயணிகள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் என்ற உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்திலும், விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் விமான பயணத்தின் முழுநேரமும் முகக்கவசத்துடன் இருக்க வேண்டும் எனவும் சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று டிஜிசிஏ புதிய விதிமுறைகளை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் டிஜிசிஏ கூறியிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விமான நிலையத்திலும், விமானத்தில் பயணம் செய்யும் முழுநேரமும் பயணிகள் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். பயணத்தின் போது முகக்கவசத்தை அவர்கள் அகற்றக்கூடாது. முகக்கவசம் அணியாதவர்களை விமானத்தில் ஏற்றக்கூடாது.
மீறினால் நடவடிக்கை
மேலும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே விமான நிலையங்களிலும், விமானத்திலும் பயணிகள் முகக்கவசத்துடன் இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. முகக்கவசத்தை அகற்றும் பயணிகள் விமானத்திலிருந்து இறக்கிவிடப்படுவர்.
சிஐஎஸ்எப் கண்காணிப்பு
முகக்கவசத்துடன் பயணிகள் பயணிப்பதை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) கண்காணிப்பர். இந்த விதிமுறைகளை விமானப் பயணிகள் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காதவர்கள் விமானத்தில் இருந்தும், விமான நிலையத்தில் இருந்தும் வெளியேற்றப்படுவர். உணவு சாப்பிடும்போது மட்டும் பயணிகள் முகக்கவசத்தை அகற்றிக்கொள்ளலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT