Published : 09 Jun 2022 05:28 AM
Last Updated : 09 Jun 2022 05:28 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக இந்து அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில் அந்த சிவலிங்கத்துக்கு அன்றாடம் பூஜை செய்ய அனுமதி கோரி அயோத்தி மடத்தின் அதிபதி சுவாமி அவிமுக்தேஷ் வரானந்த் உண்ணாவிரதம் தொடங்கினார்.
இதில் உணவு, நீர் அருந்தாமல் வாரணாசியின் கங்கை படித்துறையில் உள்ள வித்யாமடத்தில் அமர்ந்தார். இதனால், அவரது உடல்நிலை மோசமானது. இச்சூழலில் உண்ணாவிரதத்தை முடிக்கக் கோரி நேற்று ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சரஸ்வதி கடிதம் எழுதியுள்ளார். இத்துடன் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்திலிருந்தும் சுவாமி அவிமுக்தேஷ் வரானந்திற்கு கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை சுவாமி முக்தேஷ்வரானந்த் முடித்துக் கொண்டார். அதேசமயம், இந்தக் கோரிக்கையுடன் அவர் தொடுத்த வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கியான்வாபியில் கடந்த மே 16-ல் முடிந்த களஆய்விற்கு பின் வாரணாசி சிவில் நீதிமன்ற உத்தரவின்படி, ஒசுகானாவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும் சிங்காரக் கவுரி அம்மன் தரிசன மனுவை தள்ளுபடி செய்யவும், மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி கேட்ட இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் அளிக்கவில்லை. எனினும், மசூதியினுள் தொழுகை மீதானத் தடையை நீக்கியிருந்தது. தொடர்ந்து, மசூதி தரப்பினருடன் மனுவை வாரணாசியின் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை ஜூலை 6-ம் தேதி நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT