Published : 08 Jun 2022 11:54 AM
Last Updated : 08 Jun 2022 11:54 AM

'உள்நாட்டு முஸ்லிம்களின் குரல்கள் பிரதமர் மோடிக்கு கேட்காது' - ஓவைசி விமர்சனம்

லட்டூர்: நபிகள் நாயகம் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் உள்நாட்டு முஸ்லிம் குரல்களைக் கேட்காத அரசு வெளிநாட்டு கண்டனத்துக்கு பணிந்து நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் மகாராஷ்டிராவில் லட்டூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், "சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்நாட்டில் முஸ்லிம் மக்கள் கோரினர். அப்போதெல்லாம் செவி கொடுக்காத மத்திய அரசு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தபின்னரே இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. உள்நாட்டு முஸ்லிம்களின் குரல் பிரதமர் மோடிக்கு கேட்காது. நீக்கப்பட்ட இருவரையும் 6 மாதங்களில் கட்சியில் சேர்க்காமல் இருந்தால் சரி. அவர்கள் பேசியதும், ட்வீட் செய்ததும் தவறாக இருந்தது என்றால் அரசாங்கமே பொறுப்புடன் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டாமா. அப்போதுதானே நீதிநிலைநாட்டப்படும்" என்று கூறினார். ஆனால், நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரின் பெயர்களைச் சொல்லாமலேயே ஒவைசி பேசினார்.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்ளாக இருந்த நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி குறித்து அவதூறாக கருத்து கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இருவரும் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

பாஜக உத்தரவு: இந்நிலையில், பாஜக ஊடகப் பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள், தலைவர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கலாம். எந்தவொரு மதத்தின் தலைவர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய பாஜக தலைவர்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு 38 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளி யிடக்கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மத விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவது, அறிக்கை வெளியிடும் முன்பு கட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதம்: இது ஒருபுறம் இருக்க பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சுக்கு பழிவாங்கும் விதமாக குஜராத், உ.பி., மும்பை மற்றும் டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று அல் கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல் கொய்தா இன் சப் கான்டினன்ட் (AQIS) என்ற தீவிரவாத அமைப்பின் சார்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 ஆம் தேதியிடப்பட்ட மிரட்டல் கடிதத்தின் விவரம் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x