Published : 08 Jun 2022 05:52 AM
Last Updated : 08 Jun 2022 05:52 AM

முதுகு தண்டுவட நோய் பாதிப்புடன் சி.ஏ. முடித்து சாதித்த கேரள பெண் மரணம்

கொச்சி: முதுகு தண்டுவடத்தில் அரியவகை மரபணு நோய் பாதிப்புடன் போராடி சி.ஏ. முடித்து, அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து சாதனை படைத்தவர், திடீரென இறந்தது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஈரூர் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்து( 28). இவரது தந்தை ஜெயபிரகாஷ், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். ப்ரீத்துக்கு பிறவியிலேயே அவரது முதுகு தண்டுவடத்தில் அரியவகை மரபணு நோய் பாதிப்பு (ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) ஏற்பட்டது.

இதனால் அவர் சிறுவயது முதல் சக்கர நாற்காலியில்தான் செல்வார். அடுத்தவர் உதவி இல்லாமல், அவரால் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் திரும்ப கூட முடியாது. இந்த பாதிப்புடன் அவர் சிறுவயது முதலே நன்கு படித்தார். வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சிகளில் இவர் பல பதக்கங்களை வென்றார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, ப்ரீத்து டியூசன் எடுத்து வந்தார். அதோடு ‘மைண்ட் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்து மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவையாற்றினார். பி.காம் பட்டப்படிப்பு முடித்தபின் சி.ஏ. படித்து 5 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றார்.

அதன்பின் ‘டெலாய்ட்டே’ என்ற அமெரிக்க நிறுவனத்தில் இவர் இணை ஆலோசகராக பணியாற்றினார். இவருக்கு கடந்த வாரம் திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஞாயிறு அன்று காலை அவர் இறந்து விட்டார். இச்சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x