Published : 07 Jun 2022 11:01 AM
Last Updated : 07 Jun 2022 11:01 AM
புதுடெல்லி: மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது என்று நபிகள் நாயகம் தொடர்பாக நூபுர் சர்மா பேசியதால் ஏற்பட்ட சர்வேதேச சர்ச்சை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சங்க பரிவாரம் மீண்டும் நம் நாட்டினை அவமதித்துள்ளது. உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம், பாஜக செய்தித் தொடர்பாளரின் அவமதிப்புப் பேச்சால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
Sangh Parivar has once again disgraced our revered secular democracy before the world, with the derogatory remarks made by BJP spokespersons against Prophet Muhammad. It's high time to raise unanimous voice against the forces of bigotry. pic.twitter.com/zPJo7dHQlU
முன்னதாக நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பினராயி விஜயன், "ஆர்எஸ்எஸ் தேசத்தை தர்மசங்கடமான சூழலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. வெறுப்புப் பிரச்சாரங்களை செய்வோர் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேச வேண்டும் என்பது சங்க பரிவாரத்தின் கொள்கையிலேயே இருக்கிறது. இந்தப் பேச்சு சமூக பாதுகாப்புக்கு மட்டும் உலை வைக்கவில்லை தேசத்தின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியிருந்தார்.
ஜிசிசி நாடுகளான குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், யுஏஇ.,யுடன் இந்தியா கடந்த 2020-21 காலகட்டத்தில் 90 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. ஜிசிசி நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். வசிக்கின்றனர். பிரதமரமாக பதவியேற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் மோடி இந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக் கருத்துகளால் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் இச்சர்ச்சை தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை பின்னணி: கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபி குறித்து அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த நுபுர் சர்மா. தொடர்ந்து முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி இருந்தார் பாஜக-வின் நவீன் குமார். அதனை எதிர்த்து இஸ்லாமியர்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில கடைக்காரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. அது தொடர்பாக கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அம்மாநில காவல்துறை. இந்நிலையில் தான் வளைகுடா நாடுகளின் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன. அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் நுபுர் சர்மாவையும், நவீன் குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
15 நாடுகள் கண்டனம்: கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக் கிழமையன்று கண்டனம் தெரிவித்தன.நேற்று (திங்கள் கிழமை) ஈரான், ஈராக், பஹ்ரைன், பாகிஸ்தான், தாலிபான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுவரை மொத்தம் 15 இஸ்லாமிய நாடுகள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT