Published : 06 Jun 2022 02:14 PM
Last Updated : 06 Jun 2022 02:14 PM
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் படுகொலையில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சந்தேக நபர்கள் 8 பேரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். பிரபல பஞ்சாபி பாடகரும் ராப் பாடகருமான சித்து மூஸ் வாலா. அவருக்கு பணம் பறிக்கும் கும்பல்கள் பல தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தன. இந்நிலையில், கடந்த மே 29 ஆம் தேதி நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்த பாடகர் சித்து மூஸ் வாலா துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சித்துவின் உடலில் இருந்து 25 புல்லட்டுகள் எடுக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது படுகொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலும், கனடாவிலிருந்து இயங்கும் கோல்டி ப்ரார் கும்பலும் தாங்களே காரணம் எனக் கூறிவருகின்றன. இதனையடுத்து டெல்லி திகார் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயிடமும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பஞ்சாபில் சில முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அந்த வரிசையில் பாடகர் சித்து மூஸ் வாலாவுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு குறைக்கப்பட்ட அடுத்த நாளே சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை குறித்து உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சித்து மூஸ் வாலாவின் படுகொலையில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சந்தேக நபர்கள் 8 பேரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது. இவர்கள் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விவரம்: நம்பர் 1: மன்ப்ரீத் சிங் மன்னு. பஞ்சாப் மாநிலம் மோகவைச் சேர்ந்தவர். சிறையில் இருந்தவர்
நம்பர் 2: ஜக்ரூப் சிங் ரூபா. இவர் அமிர்தசரஸை சேர்ந்தவர்.
நம்பர் 3: அமிர்தசரஸைச் சேர்ந்த மன்னி.
நம்பர் 4: ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த ப்ரியவர்த் ஃபவுஜி. இவர் ராம்கரன் கும்பலைச் சேர்ந்தவர். இவரைப் பற்றிய தகவல் அளித்தால் ரூ.25,000 ரொக்கப் பணம் அளிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நம்பர் 5: அங்கித் செர்சா ஜடி. இவரும் ஹரியாணா மாநில சோனிபாட்டை சேர்ந்தவர். ஆனால் இவர் மீது வேறு எந்த கிரிமனல் வழக்குகளும் இல்லை என போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
நம்பர் 6: மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த சந்தோஷ் ஜாதவ. ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வருகிறார்.
நம்பர் 7: புனேவைச் சேர்ந்த சவுரம் மஹாகல்
நம்பர் 8: ராஜஸ்தானின் சிகார் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பனுடா.
இந்த 8 பேரும் தான் சித்து மூஸ் வாலா கொலையில் பிரதான குற்றவாளிகளாக சந்தேகிக்கப் படுகிறார்கள். மேலும், இந்த 8 பேருமே துப்பாக்கிச் சூட்டில் கில்லாடி எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT