Published : 06 Jun 2022 09:54 AM
Last Updated : 06 Jun 2022 09:54 AM

இந்தியா கரோனா நிலவரம் | தொடர்ந்து 2-வது நாளாக 4000ஐ கடந்த தொற்று; 9 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 4518 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொற்று 4270 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,181,335 என்றளவில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனாவால் 9 பேர் உயிரிழந்த நிலையில் கரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 5,24,701 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.22% என்றளவில் உள்ளது.

அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,779 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதுவரை 4,26,30,852 கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.73 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை194 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை: இந்தியாவில் சில மாதங்களாக கரோனா தொற்று குறைவாக பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு4 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதையடுத்து, கரோனா தடுப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், கார்த்திக் ஆர்யன், ஆதித்யா ராய் கபூர், நடிகை கேத்ரினா கைஃப் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிஏ5 வகை கரோனா: தமிழகத்தில் முதல்முறையாக பிஏ5 வகை கரோனா உறுதியாகியுள்ளது. இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்ட 8 பேரும் குணமடைந்துவிட்டனர். கரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில், 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். 6 பேர் ஐசியூவில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x