Published : 05 Jun 2022 04:48 PM
Last Updated : 05 Jun 2022 04:48 PM
மதத் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி கான்பூர் கலவரத்துக்கு காரணமாக இருந்த செய்தி தொடர்பாளர்கள் நூபூர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது.
இது தொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், "ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு மதங்கள் தோன்றி, செழிப்பாக வளர்ந்துள்ளன. பாஜக அனைத்து மதத்தையும் மதிக்கிறது. எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது. அத்தகைய நோக்குடன் செயல்படும் நபர்களையும் ஊக்குவிக்காது. இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நாட்டை அனைவரும் சமமாக வாழும், அனைவரும் சமமான மாண்பைப் பெறும் வளமிக்க நாடாக மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு முக்கியம். அப்போது தான் அனைவருமே வளத்தின், வளர்ச்சியின் கனியை சுவைக்க முடியும்" என்று விளக்கியுள்ளது.
கலவரமும் கைதும்: பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அண்மையில் அளித்த பேட்டியில், முகமது நபிக்கு எதிராக கருத்துகளை கூறியதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து உத்தர பிரதேசம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதன்படி கான்பூரின் பரேட் சந்தையில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சூழலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்கள், பரேட் சந்தையில் திறந்திருந்த கடைகளை மூடும்படி வற்புறுத்தினர். இதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 100 பேர் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். எதிர்தரப்பும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது.
தகவல் அறிந்து கான்பூர் காவல் ஆணையர் விஜய் சிங் மீனா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்தனர். மாநில ஆயுதப்படை காவலர்களும் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை கலைக்க முதலில் தடியடி நடத்தப்பட்டது. பின்னர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. கலவரம் மற்றும் போலீஸ் தடியடியில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
கான்பூரில் 2-வது நாளாக நேற்றும் பதற்றமான சூழல் நீடித்தது. கலவரம் தொடர்பாக காவல் துறை தரப்பில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அடையாளம் தெரிந்த 40 பேர் மீதும், அடையாளம் தெரியாத 1,000 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஹயாத் ஜாபர் ஹஸ்மி கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நூபூர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் செய்தித் தொடர்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT