Published : 05 Jun 2022 05:54 AM
Last Updated : 05 Jun 2022 05:54 AM
பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னா அருகே, 2,000 ஆண்டுக்கு முந்தைய செங்கல் சுவர்களின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாட்னா ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் கும்ரஹார் என்ற இடம் உள்ளது. இங்குள்ள பழங்கால குளம் ஒன்றை, மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ், தொல்பொருள் ஆய்வுத் துறை சீரமைத்து வருகிறது. இங்கு தரைப் பகுதிகளை தோண்டிய போது, செங்கல் சுவரின் எஞ்சிய பகுதிகள் தென்பட்டன. இவை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் சுவர் குறித்து பாட்னா தொல்பொருள் ஆய்வுப் பணிகளை கண்காணிக்கும் நிபுணர் கவுதமி பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘கும்ரஹார் பகுதியில் உள்ள குளத்துக்குள் அகழாய்வு பணிகளை மேற்கொண்ட போது, செங்கல் சுவர்களின் எஞ்சிய பகுதிகளை தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவற்றின் முக்கியத்துவம் குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். குளத்துக்குள் உள்ள இந்த சுவர், மிக முக்கியமான கண்டுபிடிப்பு. இது வட இந்தியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளை ஆண்ட குஷானர்கள் கால செங்கல் சுவர்களாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால், விரிவான ஆய்வுக்குப்பின்பே, இது குறித்த முடிவுக்கும் வர முடியும். இப்பகுதியில் இதற்கு முன்பு மவுரிய வம்சத்து புதைப் பொருட்கள் மற்றும் கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.
மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் பிஹார் மாநிலத்தில் உள்ள 11 பாதுகாக்கப்பட்ட நீர்நிலைகளில், பாட்னாவில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT