Published : 03 Jun 2022 07:18 AM
Last Updated : 03 Jun 2022 07:18 AM

மாப்பிள்ளை வேண்டாம்.. - தன்னையே திருமணம் செய்து கொள்ள குஜராத் இளம்பெண் முடிவு

வதோதரா: மாப்பிள்ளையின்றி, அனைத்துவிதமான சடங்குகளுடன் தன்னையே திருமணம் செய்து கொள்ள குஜராத் இளம்பெண் முடிவு செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த இளம் பெண் ஷாமா பிந்து (24). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவருக்கு எந்த ஆணையும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை. ஆனால், மணப்பெண்ணாக வேண்டும், நெற்றியில் திலக மிட்டு மங்களகரமாக வலம் வரவேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது. இதனால், அனைத்துவிதமான சடங்குகளுடன், வரும் 11-ம் தேதி தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள இவர் முடிவு செய்துள்ளார். இதுதான் குஜராத்தில் நடைபெறும் முதல் சுய திருமணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து ஷாமா பிந்து கூறும்போது, "எனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஆனால், மணப்பெண்ணாக வேண்டும் என விரும்புகிறேன். அதனால், என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். நாட்டில் எங்கேயாவது சுய திருமணம் நடந்துள்ளதா என இணையதளத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால், எந்த தகவலும் இல்லை. நம் நாட்டில் தன்னைத் தானே நேசிக்கும் நபருக்கு உதாரணமாக நான் இருக்கலாம்.

மக்கள், தாங்கள் நேசிக்கும் நபரை திருமணம் செய்கின்றனர். நான் என்னையே நேசிக்கிறேன். அதனால்தான் இந்த திருமணம். சுய திருமணத்தை சிலர் அர்த்தம் இல்லாததாக கருதலாம். எனக்கு என் விருப்பம் முக்கியம். எனது பெற்றோரும், எனது திருமணத்துக்கு திறந்த மனதுடன் ஆசி வழங்கியுள்ளனர்" என்றார்.

கோத்ரி கோயிலில் நடைபெறவுள்ள தனது திருமணத்துக்கு 5 உறுதிமொழிகளையும் ஷாமா எழுதி வைத்துள்ளார். அனைத்துவிதமான சடங்குகளுடன், மேள தாளம் முழங்க இவருக்கு வரும் 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதோடு இவரது ஆசை முடியவில்லை. திருமணத்துக்குப்பின் கோவாவுக்கு ஒரு வாரம் தேனிலவு செல்லவும் ஷாமா பிந்து திட்டமிட்டுள்ளார். இனி யாரும் ஷாமா பிந்துவிடம், ‘நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என கேட்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x