Published : 03 Jun 2022 07:50 AM
Last Updated : 03 Jun 2022 07:50 AM

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.80,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் - தொழிலதிபர்கள் பங்கேற்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, சாஜன் ஜிந்தால் மற்றும் ஆனந்த் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நந்த கோபால் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உத்தர பிரதேசத்தில் 3-வது முறையாக நடைபெறும் இந்த அடிக்கல் நாட்டு விழா ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும். இது மிகப் பெரிய சாதனை. இந்த முதலீடுகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் 805 திட்டங்களுக்கும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் துறைகளில் 275 திட்டங்களுக்கும், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் தொழில் துறையில் 65 திட்டங்களுக்கும் தேவையான நிதியை அளிக்கும்.

90 லட்சம் எம்எஸ்எம்இ

மேலும் கல்வித்துறையில் ரூ.1,183 கோடி மதிப்பில் 6 திட்டங்களுக்கும், பால் வளத்துறையில் ரூ.489 கோடி மதிப்பில் 7 திட்டங்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ.224 கோடி மதிப்பில் 6 திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படுகின்றன.

உத்தர பிரதேசத்தில் 90 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உள்ளன. இங்கு புதிய நிறுவனங்களில் ரூ.4,459 கோடி முதலீடு செய்யப்படும். இங்கு அமைக்கப்படும் 7 தரவு மையங்களில் ரூ.19,928 கோடியும், 13 உள் கட்டமைப்பு திட்டங்களில் ரூ.6,632 கோடியும் முதலீடு செய்யப்படவுள்ளன. வேளாண் மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ரூ.11,297 கோடியும், ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ரூ.7,876 கோடியும் உற்பத்தி துறையில் ரூ.6,227 கோடியும் முதலீடு செய்யப்படவுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x