Published : 02 Jun 2022 07:43 AM
Last Updated : 02 Jun 2022 07:43 AM

அரசியலமைப்பு சட்ட தினமான நவ.26-ல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் போர்க்கால அடிப்படையில் விரைவாக நடைபெறுகின்றன.

அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ம் தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு, மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்குகள், உணவு கூடங்கள் இதில் உள்ளன.

2022-ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும், என இத்திட்டம் தொடங்கியது முதல் அரசு கூறி வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை புதிய நாடாளுமன்றத்துக்கு மாற்றுதல், நரேந்திர மோடி அரசுக்கு மற்றொரு முக்கிய சாதனையாக இருக்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடங்குவதற்கு, நவம்பர் 26-ம் தேதி சிறந்த நாளாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதற்கான கட்டுமானத்தை இந்தாண்டு அக்டோபர் இறுதியில் முடிக்க வேண்டும் என, ஒப்பந்தகாரர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட பணிகளின் முன்னேற்றம், ஒவ்வொரு வாரமும் ஒப்பந்தகாரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் இருக்கைகள், மேசைகள் எல்லாம் வெவ்வேறு இடங்களில் தயாராகி வருகின்றன. பணிகளை முடிப்பதில் உள்ள சிரமத்தை போக்க, சிறிய அளவிலான ஆலோசனைக் கூட்டங்களும் நடக்கின்றன. மிகப்பெரிய திட்டத்தை குறுகிய காலத்தில், புதிய மாற்றங்களுடன் முடிப்பது மிகவும் கடினமான பணி என அரசு அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர்.

அதே நேரத்தில் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை, இந்தாண்டு குளிர்கால கூட்டத்துக்கு தயாராகிவிடும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர். அதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம், இந்தாண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x