Published : 02 Jun 2022 06:54 AM
Last Updated : 02 Jun 2022 06:54 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கியான்வாபி மசூதி வழக்கில் நடைபெற்ற விசாரணை ஜூலை 4-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலுக்கு அருகிலுள்ள ஷாயி ஈத்கா மசூதி மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடைபெறுகின்றன. மேலும், டெல்லி மற்றும் போபாலின் ஜாமியா மசூதிகள் மற்றும் குதுப் மினார் ஆகியவற்றுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது. இந்த சூழலில், வாரணாசியின் பஞ்ச்கங்கா கட் பகுதியில் உள்ள ஆலம் கீர் தர்ஹரா மசூதி, அங்கிருந்த பிந்து மாதவ் கோயிலை இடித்து கட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி ஆகாஷ் வர்மா முன் ஆலம் கீர் தர்ஹரா மசூதிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் வசிக்கும் அதுல் குல் ஆதி உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் நேற்று மனு அளித்துள்ளனர். இதில், தர்ஹரா மசூதி நிர்வாகிகள் சாதிக் அலி, ஜமால் மற்றும் முன்னா ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை நீதிபதி ஆகாஷ் வர்மா, ஜூலை 4-ம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மனுவில், அதுல் குல்லின் வழக்கறிஞர் ரானா ஆனந்த் ஜோதி குறிப்பிடுகையில், ‘‘தற்போது மசூதியுள்ள இந்த இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக பிந்துமாதவ் கோயில் இருந்தது. இதனால், அந்த மசூதியை மாதவராவ் தர்ஹரா மசூதி எனவும் அழைப்பது உண்டு. அங்கிருந்த கோயிலில் மஹா விஷ்ணுவை இந்துக்கள் ஆரத்தியுடன் தரிசித்து வந்தனர். இதை இடித்து 1669-ல் அவுரங்கசீப்பால் மசூதி கட்டப்பட்டுவிட்டது. அப்போது முதல் அதில் சட்டவிரோதமாக தொழுகையை முஸ்லிம்கள் நடத்துகின்றனர். இதை இந்துக்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆலம் கீர் மசூதியானது முஸ்லிம் மற்றும் இந்துக்களின் கட்டிட அமைப்பில் அமைந்துள்ளது. இதன் மீது உயரமாக இருந்த 2 மினார்களில் ஒன்று, 1948-ல் இடிந்து விழுந்து சிலர் உயிரிழந்தனர். ஜேம்ஸ் ஸ்மித் என்ற ஆங்கிலேயர் அதில் பராமரிப்பு பணி செய்தும் பலனளிக்கவில்லை. இதனால், பாதுகாப்பு கருதி மற்றொரு மினாரையும் அரசே இடித்துவிட்டது. தற்போது இந்த மசூதி மீது 3 குவிமாடங்கள் அமைந்துள்ளன.
சிவ வழிபாட்டின் சைவ பிரிவினருக்கு பெயர் பெற்றது வாரணாசி. இங்கு வைணவ பிரிவினரும் வாழ்கின்றனர். இவர்கள் வாரணாசியின் ஆலம் கீர் மசூதி அமைந்த பஞ்ச்கங்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இங்கு ராமானந்த் ஆச்சார்யாவின் ஸ்ரீமத்மடமும் அமைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT