Published : 31 May 2022 02:14 PM
Last Updated : 31 May 2022 02:14 PM
புதுடெல்லி: “பாடப் புத்தகங்களில் பிருத்விராஜ் பற்றி ஒரே ஒரு பாரா மட்டும்தான் உள்ளது; ஆனால், முகலாய மன்னர்கள் குறித்து பல நூறு பாராக்கள் உள்ளன. எனவே, வரலாறு பாடப் புத்தகங்களில் பாடங்களை மாற்றியமைக்க வேண்டும்” என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆதங்கத்துடன் கூறினார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான அக்ஷய் குமார் மன்னர் பிருத்விராஜாக நடித்து, 'பிருத்விராஜ்' எனும் படம் ஜூன் 3-ல் வெளியாகவுள்ளது. இதன் விளம்பரத்திற்காக, உத்தரப் பிரதேசம் வாரணாசிக்கு வந்திருந்தார் அக்ஷய் குமார். அவருடன் அப்படத்தின் நாயகியான உலக அழகி மனுசி சில்லர் உள்ளிட்ட வேறு சில நட்சத்திரங்களும் வந்திருந்தனர். அப்போது அவர், செய்தியாளர்களிடம் வரலாற்றுப் பாடங்கள் பற்றிய தன் கருத்துகளை வெளியிட்டார்.
இது குறித்து அக்ஷய் குமார் கூறும்போது, ''நமது இந்து பேரரசர்களை பற்றி பாடங்கள் குறைவாக உள்ளன. மன்னர் பிருத்விராஜ் சவுகானைப் பற்றி ஒரு பாரா மட்டும் உள்ளது. ஆனால், முகலாய மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியர்கள் பற்றி பல நூறு பாராக்கள் உள்ளன. நம் குழந்தைகளுக்கு ராணா பிரதாப் சிங், மராட்டிய சிவாஜி போன்ற இந்து மன்னர்களை பற்றி அதிகம் தெரியவில்லை.
இந்த நிலையை நடுநிலையாக இந்திய வரலாற்றுக் கல்விப் பாடங்களில் மாற்றியமைக்கப்பட வேண்டும். நம் இந்து மன்னர்களை பற்றிய விரிவானப் பாடங்களும் அவசியமாகிறது. நான் திரைப்படங்களின் மூலம் நமது நாட்டின் பண்டையக் கலாசாரத்தையும், இந்து மன்னர்களை பற்றியும் புதிய தலைமுறையினர் அறிய பணியாற்றுகிறேன். இதற்காக, காசியிலிருந்து சோம்நாத் கோயில் வரை காவி நிறக் கொடியுடன் செல்ல இருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
பாஜக நிர்வாகிகளுக்கு மிகவும் பிடித்தமான இந்தி நாயகராக அக்ஷய் குமார் கருதப்படுகிறார். இவரது நடிப்பில் 'ராம் சேது' எனும் பெயரிலும் ஒரு இந்தி திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இதனிடையே, அக்ஷய் குமாரின் 'பிருத்விராஜ்' படத்தின் சிறப்புக் காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூன் 3-ல் டெல்லியில் காணவுள்ளார். இவருடன் மேலும் சில முக்கிய பாஜக தலைவர்களும் இப்படத்தை கண்டு ரசிக்கவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT