Published : 31 May 2022 04:37 AM
Last Updated : 31 May 2022 04:37 AM
புதுடெல்லி: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அந்தக் குழந்தைகளுக்கு 23 வயது நிறைவடைந்ததும் ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும். அத்துடன் இலவச கல்வி, மருத்துவம், உயர்கல்வி பயிலும்போது மாதம் ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும்.
கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், ‘பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மே 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கரோனாவால் பெற்றோர், தத்து எடுத்த பெற்றோர் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் 23 வயதை எட்டும்வரை அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், தங்க இடம், உணவு வழங்கப்படும்.
இந்நிலையில், பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் திட்டத்தின் பயன்களை குழந்தைகளுக்கு அளிக்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிக் கல்வி பயில்வதற்கான உதவித் தொகை பிஎம் கேர்ஸ் திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. பிஎம் கேர்ஸ் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் சுகாதார காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கரோனா தொற்றால் பெற்றோரை பறிகொடுத்துவிட்டு இன்று நம்முடன் இருக்கும் குழந்தைகளின் வலியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். நான் இப்போது நாட்டின் பிரதமராக அல்ல, அந்தக் குழந்தைகளின் குடும்ப உறுப்பினராக பேசுகிறேன். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கஷ்டங்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறிய முயற்சிதான் பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் திட்டம். நாட்டு மக்கள் அனைவரும் உங்களுடன் (குழந்தைகள்) இருக்கிறார்கள் என்பதை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.
தொழில்முறை படிப்பு அல்லது உயர் கல்வி பயில விரும்பும் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படும். மேலும் உயர்படிப்பு படிக்கும் காலத்தில் (18 முதல் 23 வயது வரை) இதர திட்டங்கள் மூலம் அன்றாட தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 23 வயது நிறைவடைந்தவுடன் ரூ.10 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்தோம். பிரச்சினைக்கு நாம் காரணமாக அமையவில்லை. மாறாக தீர்வாக உருவெடுத்தோம். தடுப்பூசியை கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு வழங்கினோம். நம் நாடு அதிக மக்கள் தொகையை கொண்டிருந்த போதிலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினோம். இதுவரை சுமார் 200 கோடிடோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கரோனாவின் எதிர்மறை தாக்கத்தில் இருந்து விடுபட்டதுடன் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறோம்.
கரோனா கால நெருக்கடியில் இருந்து விடுபட ‘பிஎம் கேர்ஸ் பண்ட்’ பெரிதும் உதவியது. குறிப்பாக, மருத்துவமனைகளை நிறுவவும், வென்டிலேட்டர்களை வாங்கவும், ஆக்சிஜன் ஆலைகளை நிறுவவும் பெரிதும் உதவியது. இதன் காரணமாக பலரின் உயிரை காப்பாற்ற முடிந்தது. வரும் காலத்திலும் பலரின் உயிரை காப்பாற்ற முடியும்.
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பங்கள் நேர்ந்தாலும், நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும்.
8 ஆண்டுகள் சாதனை
மத்தியில் பாஜக அரசு அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். குறிப்பாக தூய்மை இந்தியா, ஜன் தன் யோஜனா திட்டங்களால் ஏழைகள் பலன் அடைந்துள்ளனர். அரசின் நலத் திட்டங்கள் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏழைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
உலக அரங்கில் இந்தியாவின் பெருமை அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் சக்தி அதிகரித்துள்ளது. நம் நாட்டின் இந்த வெற்றிப் பயணத்தை இளைஞர்களின் சக்தி வழிநடத்துகிறது என்பது பெருமிதமாக உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் ஊழலும் பிராந்திய பாகுபாடும் மலிந்து காணப்பட்டது. இத்தகைய தீமைகளில் இருந்து இந்தியா இப்போது விடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT