Published : 30 May 2022 04:01 PM
Last Updated : 30 May 2022 04:01 PM
புதுடெல்லி: கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி அரசின் செல்வாக்கு தற்போது உச்சத்துக்குச் சென்றுள்ளதாக நாடுமுழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு தேர்தலில் 2-ம் முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிய பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் ஆவதையொட்டி லோக்கல் சர்க்கிள் என்ற கருத்து கணிப்பு நிறுவனம் நாடுதழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
மக்களின் மனநிலையை அறியும் வகையில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் சுமார் 64,000 பேர் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருவதாக 67% பேர் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 51% அதிகமாகும். 2020-ல் தொற்று தொடங்கிய போது 62% ஆக இருந்தது, இரண்டாவது அலையின் போது இது 51% ஆக குறைந்தது தற்போது மீண்டும் அதிகமாகி உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற கவலைகள் இருந்த போதும் பிரதமர் மோடி அரசின் புகழுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 2-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியை பிடித்த பிறகு எதிர்பார்ப்புகளை சரியாக முறையில் பூர்த்தி செய்து வருகிறது.
கரோனாவை சிறப்பாக கையாண்டது
கரோனா 3-வது அலை வந்தால் கூட பிரதமர் மோடி அரசு அதைக் சரியான முறையில் கையாள தயாராகவே உள்ளது
வேலையில்லா திண்டாட்டத்தை மோடி அரசு சிறப்பாக கையாள்வதாக 37% மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டவர்களில் 47% பேர் மோடி அரசு அதுபற்றி பேசவில்லை என்று என்றும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர். .
வேலையில்லா திண்டாட்டத்தை மோடி அரசு சிறப்பாக கையாள்வதாக 2021 -ம் ஆண்டு கருத்துக் கணிப்பில் 27% பேர் கூறினர். இது, 2020 இல் 29% ஆகவும் இருந்தது. அப்போது ஊரடங்கு காரணமாக நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்தார்கள். இருப்பினும் கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம் உதவியது.
காற்றின் தரத்தை மேம்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் பிரதமர் மோடி அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று 44% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத ஒற்றுமையை திறமையுடன் மோடி அரசு பேணி காத்த வருவதாக 67% பேர் கூறியுள்ளனர். அதேசமயம் 33% பேர் கருத்துக் கூறவில்லை.
வர்த்தகம் செய்வது எளிதானது
பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகளால் இந்தியாவில் வர்த்தகம் செய்வது எளிதாகியுள்ளதாக 50%க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் குறையவில்லை என்று 73% இந்தியர்கள் கூறியுள்ளனர்.
நாட்டின் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இது முக்கிய பிரச்சினையாக மக்கள் பார்க்கின்றனர். அதேசமயம் மோடி அரசு கோதுமை மற்றும் சர்க்கரையின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் சில்லரை விற்பனை பணவீக்க விகிதம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தாலும் மத்திய அரசு பொருளாதாரத்தை நன்றாகவே கையாள்கிறது என்று கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பலர் கூறியுள்ளனர்.
தங்கள் எதிர்காலம் மற்றும் தங்கள் குடும்பங்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகக் 73% பேர் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT