Published : 30 May 2022 01:39 PM
Last Updated : 30 May 2022 01:39 PM
புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியடைந்துள்ள நடிகை நக்மா, நான் தகுதி குறைவானவளா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உள்ள 57 உறுப்பினர்களுக்கான ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (மே 31) முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் சார்பில் ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நடிகை நக்மா எதிர்பார்த்து இருந்தார். அவருக்கு வாய்ப்பளிக்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: ‘‘2003-04ல் நான் காங்கிரஸில் இணைந்தபோது எங்கள் கட்சி ஆட்சியில் இல்லை. அப்போது தலைவர் சோனியா காந்தி, என்னை மாநிலங்களவை எம்.பி.யாக்குவதாக தனிப்பட்ட முறையில் எனக்கு உறுதியளித்திருந்தார்.
அதன்பிறகு இப்போது 18 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ஒருமுறை கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் இருந்து இம்ரானுக்கு இடமளிக்கப்படுகிறது. நான் கேட்கிறேன், நான் என்ன தகுதி குறைவானவளா?" என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT