Published : 30 May 2022 05:44 AM
Last Updated : 30 May 2022 05:44 AM

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் சிறப்பாக பணியாற்றும் அமைச்சர்கள்: ஸ்மிருதி இரானிக்கு முதலிடம்

ஸ்மிருதி இரானி

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சிறப்பாக பணியாற்றுவதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ல் அமைந்தது. தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைத்தது.

கடந்த 8 ஆண்டுகளில்... பதவியேற்று தற்போது 8 ஆண்டுகளை இந்த அரசு நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிதலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் சிறப்பாக பணியாற்றுபவர்களில் முதலிடத்தை அமைச்சர் ஸ்மிருதி இரானி பெற்றுள்ளார் என்று ஐஏஎன்எஸ்-சிவோட்டர் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவாளர்கள் தரப்பு, தேர்வு செய்த முதல் 5 அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்மிருதி இரானி பெற்றுள்ளார். தலித்துகள், நிலமில்லாத தொழிலாளர்கள், குறைந்த வருவாய் கொண்ட மக்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோர் அமைச்சர் இரானிக்கு முதலிடம் கொடுத்து தேர்வு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்ப்பாளர்கள் தரப்பு தேர்வு செய்த மிகவும் சிறப்பாக பணியாற்றும் முதல் 5 அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

இரு தரப்பிலும் 2-வது இடத்தைமத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றுள்ளார்.

அமித் ஷா, ஜெய்சங்கர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவாளர்கள் தரப்பில் 3-வது இடத்தையும், எதிர்ப்பாளர்கள் தரப்பில் 16-வது இடத்தையும் பெற்றுள்ளார். இரு தரப்பில் 4-வது இடத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிடித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து இந்த கணக்கெடுப்பு ஐஏஎன்எஸ்-சிவோட்டர்ஸ் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x