Published : 29 May 2022 02:24 PM
Last Updated : 29 May 2022 02:24 PM

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தொடரும் என்கவுன்ட்டர் - காஜியாபாத் எஸ்எஸ்பி ‘உ.பி சிங்கம்’ முனிராஜுக்கு பாராட்டு

புதுடெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியை ஒட்டியுள்ள காஜியாபாத்தில் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரிப்பதாகப் புகார் எழுந்தது. கொலை, கொள்ளை, வழிபறி அதிகமானதாக கூறி காஜியாபாத் மாவட்ட எஸ்எஸ்பியான பவன்குமாரை, பணியிடை நீக்கம் செய்தார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அந்தப் பொறுப்பு லக்னோ உளவுப்பிரிவு தலைமையகத்தின் எஸ்.பி. தமிழர் ஜி.முனிராஜிடம் ஏப்ரல் 3-ல் ஒப்படைக்கப்பட்டது. இவரிடம் ஏற்கெனவே ஆக்ரா மாவட்ட உளவுப்பிரிவு பொறுப்பும் இருந்தது. இந்நிலையில், பொறுப்பு எஸ்எஸ்பியான தமிழர் முனிராஜ், காஜியாபாத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரக் கடுமையாக முயற்சித்து வந்தார். இதில் காஜியாபாத்தின் முக்கியக் குற்றப் பின்னணி கொண்ட துஜானா கும்பல் பெரும் சவாலாக இருந்தது. இவர்கள் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களிடம் மாமூல் வசூலித்து வந்தனர்.

கும்பல் தலைவன் அனில் துஜானா சிறையிலிருக்க அதன் முக்கிய உறுப்பினர்கள் பில்லு துஜானாவும் ராகேஷ் துஜானாவும் குற்றங்களை தொடர்ந்து செய்து வந்தனர். கடைசியாக, கடந்த மாதம் காஜியாபாத்தில் இரட்டை கொலை செய்தும் தலைமறைவாகினர்.

25 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பில்லுவின் தலைக்கு ரூ.1 லட்சமும், 16 வழக்குகளில் தொடர்புடைய ராகேஷின் தலைக்கு ரூ.50,000 பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களை பிடிக்கத் தன் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் எஸ்எஸ்பி முனிராஜ் இறங்கினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காஜியாபாத்தின் இந்திராபுரம் மற்றும் மதுபான் பாபுதாம் ஆகிய இருவேறு பகுதிகளில் மறைந்திருந்த இருவரையும் சுற்றிவளைத்தனர். அப்போது இருதரப்பிலும் துப்பாக்கி்ச் சண்டை நடந்தது. கடைசியில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பில்லுவும், ராகேஷும் உயிரிழந்தனர்.

இந்த என்கவுன்ட்டரின் தாக்கத்தையடுத்து, காஜியாபாத்தை அருகிலுள்ள கவுதம் புத்நகர் மாவட்டத்தை போல் காவல்துறை ஆணையமாக மாற்ற முடிவு செய்த முதல்வர் யோகி, அதை தள்ளி வைத்துள்ளார். எஸ்எஸ்பியாக முழு பொறுப்பையும் முனிராஜிடம் ஒப்படைத்ததுடன் அவரை உளவுப்பிரிவு பணியிலிருந்து விலக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் யோகி. இதன்மூலம், உ.பி.யில் தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வரான யோகி ஆட்சியில் என்கவுன்ட்டர்கள் தொடர்கின்றன.

இதற்காக, எஸ்எஸ்பி ஜி.முனிராஜுக்கு பாராட்டுக்கள் குவியத் துவங்கிவிட்டன. தனது அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனதால் அதிகாரி முனிராஜ், ‘உ.பி. சிங்கம்’ என்றழைக்கப்படுகிறார்.

ஏற்கெனவே தாம் பணியாற்றிய புலந்த்ஷெஹர், பரேலி மற்றும் அலிகர் மாவட்டங்களிலும் பல்வேறு என்கவுன்ட்டர்களை நடத்தினார் முனிராஜ். மத நல்லிணக்கத்தை குலைக்க முயன்றதாக பாஜக நிர்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகளையும் பதிவு செய்திருந்தார். கோவையில் கொள்ளை போன ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்டு தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தவர் முனிராஜ்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், ஹரியாணாவில் முதுகலை பட்டத்தையும் பெற்ற முனிராஜ், 2009-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். இவர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அ.பாப்பாரப்பட்டியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x