Published : 10 May 2016 03:21 PM
Last Updated : 10 May 2016 03:21 PM
பிஹார் மாநில கயாவில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.சி மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு ஆதித்யா சச்தேவ் என்ற 12-ம் வகுப்பு மாணவன் தனது காரை, ராக்கி யாதவ் சென்ற காரைத் தாண்டி ஓட்டிச்சென்றார். இதனையடுத்து வழிகேட்டு ராக்கி யாதவ் காரும் முயன்றது பிறகு ராக்கி யாதவ் காரில் இருந்த காவலர் துப்பாக்கியால் வானில் சுட்டு ஆதிதியாவின் காரை நிறுத்தினர்.
இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இந்நிலையில் ஆதித்யா சச்தேவ் மீது துப்பாக்கித் தோட்டா பாய்ந்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை போத்கயாவில் ராக்கி யாதவ்வை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறை உயரதிகாரி கரிமா மாலிக் கூறும்போது, “முக்கியக் கொலைக் குற்றவாளியான ராக்கி யாதவ் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை பிந்தி யாதவ்வின் மிக்சர் பிளாண்டில் ராக்கி யாதவ் மறைந்திருந்தார், அங்கு ராக்கியை அவர் பயன்படுத்திய கை துப்பாக்கியுடன் கைது செய்தோம்” என்றார்.
முகமூடியுடன் ராக்கி யாதவ்வை செய்தியாளர்களிடம் அழைத்து வந்த போலீஸார், குற்றத்தை ராக்கி யாதவ் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.
ஆனால் சில நிமிடங்களிலேயே தான் இந்தக் கொலையைச் செய்யவில்லை தான் நிரபராதி என்றார் ராக்கி யாதவ். “நான் டெல்லியிலிருந்தேன். என்னுடைய தாயார் என்னை அழைத்தார் அதனால் போலீஸ் அதிகாரியிடம் சரணடைந்தேன். நான் துப்பாக்கியால் சுடவில்லை. நான் கோர்ட்டில் அனைத்தையும் கூறுவேன்” என்றார்.
இவர் கயா நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராக்கி யாதவ் சரணடைந்தாரா, கைது செய்யப்பட்டாரா என்று போலீஸ் அதிகாரி கரிமா மாலிக்கிடம் கேட்ட போது, “இது நிச்சயமாக கைதுதான்” என்றார்.
ஏற்கெனவே ராக்கி யாதவ்வின் தந்தை பிந்தி யாதவ், மெய்க்காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
முதல்வர் நிதிஷ் குமார், “குற்றவாளி தப்ப முடியாது, சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT