Published : 28 May 2022 08:35 AM
Last Updated : 28 May 2022 08:35 AM
ஹைதராபாத்: வரும் 2024-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 40 சதவீத இடங்களை இளைஞர்களுக்கு வழங்கும் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெகன் தன் மீதான வழக்குகளில் இருந்து வெளியேவர மத்திய அரசிடம் ஆந்திர மாநிலத்தை அடகு வைத்து விட்டார் என்றும் சந்திரபாபு சாடியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டை முன்னிட்டும் ஓங்கோலில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் ஊர்வலமாக மேடைக்கு வந்தனர். மகளிர் அமைப்பினர் பைக் ஊர்வலம் நடத்தினர்.
என்.டி.ஆர் சிலைக்கு சந்திரபாபு நாயுடு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சி கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஆனால் அதைவிட கடந்த 3 ஆண்டுகளில் நம் கட்சி சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். ஆந்திராவில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. தற்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியால் நமக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர அரசியலை, தெலுங்கு தேசம் கட்சிக்கு முன், கட்சிக்கு பின் என இரண்டாக பிரிக்கும் அளவுக்கு நாம் மக்களுக்கு சேவை செய்துள்ளோம். ஜெகனுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை. போலீஸாரை வைத்துக்கொண்டு ஆட்சி புரிகிறார். யார் அவர்களுக்கு எதிராக பேசினாலும் அவர்களை அழிக்க நினைக்கிறார்கள்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஆதலால் வரும் 2024-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் 40 சதவீத தொகுதிகள் திறமையான இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும். இதற்காக யாருடைய சிபாரிசும் தேவையில்லை. கட்சிப் பணி, மக்கள் பணிகளை பார்த்து ‘சீட்’ வழங்கப்படும். விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்த ஜெகன் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஜெகன் ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், குடும்பத் தலைவிகள், மாணவர்கள், இளைஞர்கள் என எந்தப் பிரிவினரும் மகிழ்ச்சியாக இல்லை. மதுபான விற்பனையை அதிகரித்து மக்களை குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்கி வருகின்றனர்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அண்ணா கேன்டீன் திட்டம், வெளிநாட்டு கல்வித் திட்டம், பெண்களுக்கான கல்யாணப் பரிசு திட்டம் போன்றவை ஜெகன் அரசால் கைவிடப்பட்டன. தேர்தலுக்கு முன் பூரண மதுவிலக்கு என்று கூறினர். ஆனால் மதுபான விற்பனையை அதிகரித்தனர். ஏழைகளுக்கு இலவச வீடு என்றனர். ஆனால், ஆந்திராவில் மணல் கிடைப்பதே அரிதாகி விட்டது. நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. மாநிலம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
போலவரம் அணைக்கட்டு திட்டம் என்னவானது? மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் என்னவானது? 25 எம்.பி.க்களை வெற்றி பெற வைத்தால் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற்று வருவதாக ஜெகன் கூறினார். அது என்னவானது? இதுபோன்ற கேள்விகள் ஏராளமாக உள்ளன.
ஜெகன் தன் மீதான வழக்குகளில் இருந்து வெளியேவர மத்திய அரசிடம் ஆந்திர மாநிலத்தை அடகு வைத்து விட்டார். அடுத்தது நமது ஆட்சிதான். மக்களின் பிரச்சினைக்காக பாடுபடுங்கள். பொய் வழக்குகளுக்கு பயப்படாதீர்கள். ஜெகனை வெளியேற்றுவோம். ஆந்திராவை காப்பாற்றுவோம். இதுவே நம்முடைய தாரக மந்திரம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT