Published : 27 May 2022 07:07 AM
Last Updated : 27 May 2022 07:07 AM
சூரத்: கல்வியின் தரத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளைவிட சிறந்து விளங்குவதால், தொடர்ந்து 3-வது ஆண்டாக, அங்கு மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது.
பொதுவாக அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குவது வழக்கம். ஆனால், அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த குஜராத் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சூரத் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் கல்வியின் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்துள்ளன. மாணவர்களுக்கு நவீன வசதிகளை வழங்குவதில் தனியார் பள்ளிகளை, சூரத் மாநகராட்சி பள்ளிகள் விஞ்சிவிட்டன.
இதன் காரணமாக மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தொடர்ந்து 3-வது ஆண்டாக கடும்போட்டியை காண முடிகிறது. மாணவர் சேர்க்கையின் அளவைவிட மூன்று மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. சூரத் நகரில் உள்ள 354-ம் எண் அரசு பள்ளியில், தனியார் பள்ளிகளில் இருந்து சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு மாணவர்களை சேர்க்க பெற்றோர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 1,400. ஆனால் இங்கு சேர 4,042 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால், இவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பாலன்போர் பகுதியில் உள்ள 318-ம் எண் அரசு பள்ளியில் 1, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே மாணவர் சேர்க்கை முழுவதுமாக முடிந்துவிட்டது. தற்போது இங்கு 83 மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இங்குள்ள சில அரசு பள்ளிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுகின்றன. எண் 334, 346, 355 ஆகிய பள்ளிகளில் மொத்த இடங்கள் 1000 முதல் 1,100 வரைதான் உள்ளன. ஆனால் 4,200 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதனால் இங்கும் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த பள்ளிகளில், சில ஆசிரியர்களின் குழந்தைகளும் படிக்கின்றனர்.
மோட்டா வராச்சா என்ற பகுதியில் உள்ள குஜராத்தி மீடியம் பள்ளியில் 720 பேர் மட்டுமே படிக்க முடியும். ஆனால் 3,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதே வளாகத்தில் உள்ள ஆங்கில வழி பள்ளியில் 225 இடங்களுக்கு 1000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதனால் இங்கும் குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெற உள்ளது.
இங்கு தரமான கல்வி அளிக்கப்படுவதால், மாணவர்களின் மன வளர்ச்சியும் நன்றாக உள்ளது. குஜராத் கல்வி மாடலை, இதர மாநிலங்களும் பின்பற்றினால், ஏழை மாணவர்களும் நவீன வசதிகளுடன், தரமான கல்வியை இலவசமாக கற்கும் நிலை விரைவில் ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...