Published : 06 May 2016 04:33 PM
Last Updated : 06 May 2016 04:33 PM
கிரீன்பீஸ் இயக்கம் தகவலுரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களின்படி, விதிமுறைகளை மீற முடியாத 4 வனப்பகுதிகளிலும் 117 ஆற்றுப்படுகை மண்டலங்களிலும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 835 நிலக்கரிச் சுரங்கங்களில் 417 நிலக்கரி சுரங்கங்கள் நீராதார அளவுகோல்களின் படி ‘விதிமுறைகளை மீறமுடியா பகுதி’ என்று வகைப்படுத்தப் படவேண்டியுள்ளதாக கிரீன்பீஸ் இந்தியா பெற்ற ஆர்டிஐ தகவல்களின்படி தெரியவந்துள்ளது. அதாவது இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்படும் போது வனப்பகுதி நீராதாரங்களுக்குப் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது கிரீன்பீஸ் அறிக்கை.
இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் சத்திஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ளன.
கடந்த ஆண்டு கிரீன்பீஸ் வெளியிட்ட அறிக்கையின் படி இந்திய வன ஆய்வுக் கழகம் விதிமுறைகளை மீற முடியாத வனப்பகுதிகளை அடையாளப்படுத்தும் நடைமுறையில் 835 நிலக்கரிச் சுரங்கங்கள் பற்றி மதிப்பீடு செய்தது. இதன்படி முக்கிய நீராதாரங்கள் இருக்கும் இடங்களில் இருபகுதிகளிலும் குறைந்தது 250 மீட்டர் வரை ஒதுக்கிவிட்டு சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறுதியிடப்பட்டது. இதற்காக நிலக்கரிச் சுரங்க எல்லைகளையும் அடையாளப்படுத்தியிருந்தனர். இதன்படி பார்த்தால் பாதி நிலக்கரிச் சுரங்கங்கள் ‘பகுதியளவில் விதிமுறை மீற முடியாதவையாகும்’.
இது குறித்து இந்திய வன ஆய்வுக் கழகம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அளித்துள்ள அறிவிக்கையில், 835 நிலக்கரிச் சுரங்கங்களில் 121 சுரங்கங்களில் தற்போது நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன, இதனை ஆய்வு செய்த போது இதில் 4 சுரங்கங்கள் ‘விதிகள் மீற முடியா’ வனப்பகுதியில் உள்ளதாகவும், 117 சுரங்கங்கள் நீராதாரப் பகுதியையும், ஆற்றுப்படுகைகளையும் ஆக்ரமித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இதற்கு பதில் அளித்த நிலக்கரித்துறை அமைச்சகம் தாமோதர், மகாநதி, வார்தா, சோன்பத்ரா, கோதாவரி என்று அனைத்து நதிப்படுகைகளையும் ஆக்ரமித்தே நாட்டின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன என்று தெரிவித்தது.
சுரங்க நடவடிக்கையும் வறட்சியும்:
கிரீன்பீஸ் மூத்த விழிப்புணர்வு பிரச்சாரகர் நந்திகேஷ் சிவலிங்கம் இது குறித்து கூறும்போது, “கட்டுப்படுத்தப்பட்ட 250 மீ பகுதியை விடுத்து சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும் நதிநீர்த் தேக்கப் பகுதிகளில் நீர் மாசடைதல், மண்ணரிப்பு, ஆகியவற்றுடன் வறட்சி காலங்களில் நீர்ப் பற்றாக்குறையை மேலும் மோசமடையவே செய்யும்.
தற்போது நாட்டில் இருக்கும் வறட்சி நிலைமைகளைக் கருத்தில் கொண்டால் இந்த அனைத்து நிலக்கரிச் சுரங்கங்களும் செயல்படும் பொது நீராதாரங்கள் நிச்சயம் பாதிக்கவே செய்யும். விதிமீற முடியாத பகுதிகளை அடையாளம் காணும் நடைமுறைகள் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஆனாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது கொள்கையில் இழுபறியைக் கடைபிடித்து வருகிறது, மத்திய நிலக்கரித்துறை அமைச்சகமோ வனப்பகுதிகளில் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தல், ஏலம் விடுதல் ஆகிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது” என்றார்.
எனவே மத்திய அரசு உடனடியாக விதிமுறைகளை மீற முடியாத வனப்பகுதிகள் எவை என்பதை அறிவித்து, அந்தக் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், சுரங்கத்துக்காக நிலம் ஒதுக்கப்படும் முன்பாக அங்கு வசிக்கும் ஆதிவாசிச் சமூகத்தினரை கலந்தாலோசிக்கவும் கிரீன்பீஸ் வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT