Published : 26 May 2022 01:54 PM
Last Updated : 26 May 2022 01:54 PM
பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து அண்மையில் சிறை சென்றார். அவருக்கு, சிறை நிர்வாகம் க்ளார்க் வேலை ஒதுக்கியுள்ளது.
இது குறித்து பட்டியாலா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள், சித்துவின் கைதி எண் 241383. அவர் சிறை எண் 7ல் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு க்ளார்க் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தனது அறையில் இருந்தே வேலைகளை செய்வார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு அறைக்கே கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.
சிறைத் தண்டனை விதிக்கப்படும் நபர்களுக்கு சிறையில் பல்வேறு வேலைகள் ஒதுக்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாது. அதை பயிற்சிக் காலம் எனக் கூறுகின்றனர். பயிற்சிக்குப் பின்னர் திறன்வாய்ந்த, பகுதி திறமை கொண்டவர்கள், திறனற்றவர்கள் என்று 3 பிரிவுகளாக கைதிகள் பிரிக்கப்படுகின்றனர். அதற்கேற்ப அவர்களுக்கு ரூ.30 முதல் ரூ.90 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. சம்பளம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே செல்கிறது. குற்றம் நிரூபணமான கைதிகள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
சித்துவுக்கு, நீதிமன்ற தீர்ப்புகளை எப்படி சுருக்கி எழுதுவது, சிறைக் கோப்புகளை எப்படி பராமரிப்பது போன்ற விஷயங்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சிறப்பு உணவு: சிறையில் உள்ள சித்துவுக்கு அவரின் உடல்நலன் கருதி மருத்துவர்களின் பரிந்துரையின்படி சிறப்பு உணவு வழங்கப்பட உள்ளது. சித்துவுக்கு எம்பாலிஸம் என்ற பாதிப்பு உள்ளது. அதனால் அவரால் கோதுமை, மைதா, இனிப்பு உட்கொள்ள முடியாது. அவருக்கு பெர்ரி வகை பழங்கள், கொய்யா, டபுள் டோண்ட் மில்க் உள்ளிட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவருடைய உணவில் அதிக நார்ச்சத்தும் இருக்கக் கூடாது மாவுச்சத்தும் இருக்கக் கூடாது. அதற்கு ஏற்ப 7 வேளை உணவுப் பட்டியலை மருத்துவர்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர். அதற்கேற்ப உணவுகள் வெளியில் இருந்து கொண்டுவந்து வழங்கப்படுகிறது.
முதியவர் ஒருவரை கார் பார்க்கிங் பிரச்சினையில் தாக்கியதாக அவர் மீது வழக்கு இருந்தது. அந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் அண்மையில் அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT