Published : 26 May 2022 12:24 PM
Last Updated : 26 May 2022 12:24 PM

பிரதமர் மோடி ஹைதராபாத் வரும் முன்பே பெங்களூரு புறப்பட்டுச் சென்ற தெலங்கானா முதல்வர்

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வர உள்ள நிலையில் அவர் வரும் முன்பே சந்திப்பை தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். இதனால் சந்திரசேகர ராவின் பாஜக மீதான கோபம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர் எஸ் கட்சிக்கும், பாஜக விற்கும் இடையே தீவிர அரசியல் மோதல்கள் நடைப்பெற்று வருகின்றன. சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாலும், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 46 வார்டுகளில் வெற்றி பெற்று இரண்டாம் பெரிய கட்சியாக தெலங்கானாவில் உருவானதாலும், டிஆர் எஸ் கட்சி தனது எதிரி காங்கிரஸ் அல்ல பாஜக தான் என்பதை உறுதி செய்தது.

அதன்படி பாஜகவிற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தனது அரசியல் காயை முதல்வர் சந்திரசேகர ராவ் நகர்த்த தொடங்கினார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் வரும் 2024-ல் இம்மாநிலத்தில் நடைபெற இருந்தாலும், இப்போதிலிருந்தே எதிரியை குறிவைத்து அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வருகிறார் சந்திரசேகர ராவ். பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக இதர மாநில கட்சித்தலைவர்களை சந்தித்து 3வது அணி அமைக்க முயற்சிகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் டெல்லி சென்று தெலங்கானா பவன் முன் அமர்ந்து விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டுமென்றும், நெல் கொள்முதலை மத்திய அரசே செய்ய வேண்டுமென்றும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும் செய்தார். இதனால், மத்திய அரசுக்கும், தெலங்கானா அரசுக்கும் இடையே இருந்த இடைவெளி கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்தது.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி, ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமான நிலையத்தில் மோடியை வரவேற்க வரவில்லை. உடல் நலம் காரணம் காட்டி அவர் வரவில்லை. இந்நிலையில், இன்று சென்னைக்கு வருவதற்கு முன் ஹைதராபாத் வர உள்ள பிரதமர் மோடி, மதியம் 12.45 மணிக்கு தனி விமானம் மூலம் ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர், 15 நிமிடங்கள் வரை பாஜக நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்திய பின்னர், அங்கிருந்து ஹைதராபாத் கச்சிபவுலி பகுதியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியின் 20ம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். இதில் சுமார் 800 மாணவ, மாணவியருக்கு அவர் பதக்கங்களை வழங்குகிறார். பின்னர் 4 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி ஹைதராபாத் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இம்முறையும் பிரதமர் மோடியை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செல்ல விரும்பவில்லை. ஆதலால், அவர் இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

அங்கு அவர் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகனும் முன்னாள் கர்நாடக முதல்வருமான குமார சாமியை சந்திக்கிறார். சந்திரசேகர ராவின் இச்செயலால் பாஜகவுடன் சந்திரசேகர ராவிற்கு உள்ள கோபம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பிரதமர் மோடியை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ், பாஜக தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் உட்பட பலர் வரவேற்க உள்ளனர்.

ஆனால், மோடிக்கு 17 கேள்விகளை மாநில அரசு தயார் செய்து பெரும் பேனர்களை மோடி செல்லும் பாதையில் 17 இடங்களில் வைத்துள்ளது ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி என்பது குறிப்பிட தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x