Published : 26 May 2022 07:51 AM
Last Updated : 26 May 2022 07:51 AM

காஷ்மீரில் தொலைக்காட்சி ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொலைக்காட்சி கலைஞர் அம்ரீன் பட் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் உள்ள அம்ரீன் பட் வீட்டில் நுழைந்த தீவிரவாதிகள் அவரை சரமாரியாக சுட்டனர். அந்த சமயத்தில் அவருடன் அவர் வீட்டில் இருந்த 10 வயது சிறுவனும் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டார். இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அம்ரீன் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 10 வயது சிறுவனுக்கு கையில் குண்டடிபட்டதால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் முக்கிய நபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அம்ரீன் பட், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பிரபலமான ஒரு நபராக அறியப்படுகிறார். டிக் டாக் மூலம் பிரபலமான அவர், அங்குள்ள லோக்கல் டிவி ஒன்றிலும் பணியாற்றி வந்துள்ளார். சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

தலைவர்கள் கண்டனம்:

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில், "தீவிரவாதிகளின் தாக்குதலால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் ஏற்பட்டுள்ளது... அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை இப்படி தாக்குவதை எந்த விதத்தாலும் நியாயப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார். இவரைப் போலவே பல தலைவர்களும் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x