Published : 25 May 2022 07:33 AM
Last Updated : 25 May 2022 07:33 AM

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான அரசியல் விவகார குழுவை அமைத்தார் சோனியா காந்தி

மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் அமைத்துள்ள சிறப்பு பணிக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் குழுவின் தலைவர் ப.சிதம்பரம், உறுப்பினர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.படம்: பிடிஐ.

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் விவகாரக் குழு மற்றும் சிறப்பு பணிக் குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று அறிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ‘நவ் சங்கல்ப்’ என்ற சிந்தனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் விவகாரக் குழு மற்றும் சிறப்பு பணிக் குழுவை சோனியா அமைத்துள்ளார். அதன்படி, அரசியல் விவகாரக் குழுவில், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் தேர்தல் வியூகர் சுனில் கனுகோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு முடிவெடுக்கும் அமைப்பாக இருக்காது என்றும் தனக்கு உதவும் அமைப்பாக இருக்கும் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சிறப்பு பணிக்குழுவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகிக்கிறார். இந்தக் குழுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், ஜிதேந்திரா சிங், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், பிரியங்கா காந்தி, அஜய் மாகென், ரன்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் தேர்தல் வியூகர் சுனில் கனுகோலு, இந்தக் குழுவிலும் உள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் தேசிய யாத்திரைக்கு, 9 உறுப்பினர் அடங்கிய மத்திய திட்டக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தலைமை ஏற்றுள்ளார். இதில் சச்சின் பைலட், சசி தரூர் மற்றும் ரவ்நீத் சிங் ஆகியோர் உள்ளனர்.

மக்களுடனான தொடர்பை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேசிய யாத்திரையை காங்கிரஸ் நடத்த உள்ளது. 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும் இந்த யாத்திரை 12 மாநிலங்களில் 3,500 கி.மீ தூரத்தை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x