Published : 24 May 2022 05:38 PM
Last Updated : 24 May 2022 05:38 PM
புதுடெல்லி: ”கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும்போது, குற்றம் நடந்ததற்கு முந்தைய, பிந்தைய மனநிலையை கீழமை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கச் சென்ற 3 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றமும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தன.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ஆர்.பட், திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிகளின் நன்னடைத்தை, சிறை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரில் ஒருவர் சிறையில் உள்ள கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். சிறையில் செய்யும் வேலைகளுக்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்து குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.
மற்றொரு குற்றவாளி சிறையிலேயே தன்னார்வ தூய்மைப் பணிசெய்து வருகிறார். பெண் குற்றவாளி எம்ராய்டரிங் எனப்படும் சித்திர தையல் வேலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். கொலை செய்யும்போது இந்த மூன்று பேரின் மனநிலை மிகவும் கொடூரமாக இருந்துள்ளது. தற்போது அவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து, "உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கு முன்பாக, குற்றம் நடந்த பின்னணி, குற்றவாளியின் வயது, குற்றம் நடக்கும்போது அவரின் மனநிலை, குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்புகள், இந்தக் குற்றவாளியால் சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்குமா போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மரண தண்டனை என்பது அரிதிலும் அரிதான வழக்குகளுக்கே வழங்கப்பட வேண்டும். செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு குற்றத்திற்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்பாக, சரியான கட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனநலன், உளவியல் அறிக்கையை முன்கூட்டியே அரசு சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT