Published : 24 May 2022 07:26 AM
Last Updated : 24 May 2022 07:26 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க அனுமதிக்கக் கோரி 2021 ஆகஸ்ட் 18-ல் வழக்கு தொடுக்கப்பட்டது. வாரணாசியின் சிவில் நீதிமன்றம் விசாரித்த வழக்கில் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது. இதில், மசூதி வளாகத்திலுள்ள ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்ததாக அறிக்கை தாக்கலானது.
இதனிடையே, மசூதி நிர்வாகம் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிங்கார கவுரி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. இதன்படி நேற்று மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான டாக்டர்.அஜய் கிருஷ்ண விஸ்வாஸ் வழக்கினை விசாரித்தார். மசூதி மற்றும் சிங்கார கவுரி வழக்கின் மனுதாரர்களான டெல்லியின் ஐந்து பெண்கள் தரப்பையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
மசூதியின் தரப்பில், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ன்படி, கியான்வாபி மீதான வழக்கை தள்ளுபடி செய்ய முதலில் வலியுறுத்தப்பட்டது.
இத்துடன், சிவலிங்கம் கிடைத்ததாக கூறப்படும் ஒசுகானாவின் சீல் அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மசூதியின் இக்கோரிக்கைகள் மீது நீதிமன்றம் முதலில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவைப் பொறுத்து இதர பிரச்சினைகளில் வழக்கு தொடரும் எனவும் கருதப்படுகிறது.
இதனிடையே, இந்துக்கள் தரப்பில், பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட நீதிபதியின் முன் வைக்கப்பட்டன. களஆய்வில் கிடைத்த ஆதாரங்களையும் வழக்கின் அங்கமாக சேர்க்க கோரப்பட்டது. களஆய்வின் அறிக்கையுடன் அதன் புகைப்படம், வீடியோ ஆதாரங்களின் நகல் அளிக்கும்படியும் கேட்கப்பட்டிருந்தது. சிங்கார கவுரியுடன், ஒசுகானாவில் கிடைத்த சிவலிங்கத்தையும் அன்றாடம் தரிசனம் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் வழக்கறிஞர் ஹரி சங்கர் பாண்டேவால், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கியான்வாபி வழக்கில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், ஐதராபாத் எம்.பி. எஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார்.
இதே நீதிமன்றத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், ஒசுகானாவில் கிடைத்த சிவலிங்கத்திற்கு அன்றாடம் பூஜை செய்து ராஜபோகம் வழங்கவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT