Published : 22 May 2022 07:40 AM
Last Updated : 22 May 2022 07:40 AM
கொல்கத்தா: மகளுக்கு சிபாரிசு செய்து, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆரம்ப கல்வி ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்தது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பரேஷ் அதிகாரியிடம் சிபிஐ நேற்று தொடர்ந்து 3-வது நாளாக விசாரணை நடத்தியது.
மேற்குவங்க மாநிலத்தில் கல்வித்துறை இணையைமைச்சராக இருப்பவர் பரேஷ் அதிகாரி. இவர் தனது மகள் அங்கிதா என்பவருக்கு, தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி ஒன்றில் உதவி ஆசிரியர் வேலையை 3 ஆண்டுகளுக்கு முன் வாங்கி கொடுத்துள்ளார்.
இது சட்டவிரோத நியமனம் என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் , அங்கிதாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும். அவர் ஆசிரியையாக பணியாற்றிய 41 மாத காலத்தில் பெற்ற சம்பளத்தை அரசுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, மகளுக்கு சட்டவிரோதமாக ஆசிரியர் பணி வாங்கி கொடுத்தது தொடர்பாக பரேஷ் அதிகாரியிடம், சிபிஐ கடந்த 3 நாட்களாக தொடர் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று காலையும் ஆவணங்களுடன் சிபிஐ அலுவலகத்தில், அமைச்சர் பரேஷ் அதிகாரி ஆஜரானார்.
மகளின் பணி நியமனம் தொடர்பாக அவர் யார் யாருக்கெல்லாம் போன் செய்தார் என்ற விவரம் கேட்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். முழுவிசாரணையும் வீடியோ எடுக்கப்படுகிறது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சட்டவிரோத நியமனம் தொடர்பாக அங்கிதாவிடம் சிபிஐ அடுத்த வாரம் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT