Published : 22 May 2022 07:59 AM
Last Updated : 22 May 2022 07:59 AM
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குடகு, மைசூரு, ஷிமோகா, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை காலத்திலும் காவிரி, கபிலா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும், கபிலா ஆற்றின் குறுக்கேயுள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியாவில் 124.80 அடி நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 103.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 16,514 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 6,224 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
கபினி அணை
இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில், கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,263 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,680 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 1,300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
ஒகேனேக்கலில் மழை
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள 7,500 கன அடி நீர் காவிரி ஆற்றில் கலந்து இரு மாநில சோதனை எல்லையான பிலிகுண்டுலுவை கடந்துள்ளது.
மேகேதாட்டு, பிலிகுண்டுலு, ஒகேனேக்கல் வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீர் ஆற்றில் கலந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒகேனேக்கல்லுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT