Published : 21 May 2022 05:00 AM
Last Updated : 21 May 2022 05:00 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில் அருகில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கு பல புதிய திருப்பங்களை உருவாக்கி உள்ளது.
இவ்வழக்கில் வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் உத்தரவின்படி, கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்தப்பட்டது. நீதிமன்றம் நியமித்த ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் கடந்த மே 6, 7-ம் தேதிகளில் கள ஆய்வு நடத்தப்பட்டது. அதற்கு கியான்வாபி மசூதி தரப்பினர் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், ஆணையரை நீதிமன்றம் நீக்கியது. அதன்பின் கடந்த மே 14 முதல் 16 வரை கள ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில், நேற்றுமுன் தினம் மாலையே முதல் முறையாக கள ஆய்வு நடத்திய அஜய் குமார் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டார். அதில் 70 உறைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் அடங்கி உள்ளன. இந்நிலையில், மே 14 முதல் 16 வரை கள ஆய்வு நடத்திய நீதிமன்ற உதவி ஆணையர் விஷால் சிங் மற்றும் அஜய் பிரதாப் சிங் ஆகியோர் நீதிமன்றத்தில் நேற்று 2-வது கட்ட அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த 2 அறிக்கைகளையும் ஏற்ற நீதிமன்றம், வழக்கை மே 23-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
இரண்டாம் அறிக்கையின்படி, மசூதியின் அடித்தள சுவர்களில் இந்து கோயில்களின் பல சின்னங்கள் கிடைத்துள்ளன. இதில், தாமரை, ஸ்வஸ்திக், மேளம், திரிசூலம், பிளிரும் துதிக்கையுடன் யானை முகங்கள் மற்றும் மணிகள் என பல இடங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, மசூதியின் 3 கோபுரங்களின் தூண்களிலும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு சம்ஸ்கிருதம் கலந்த பழங்கால இந்தி வாசகங்களும் 7 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து மசூதி அடித்தளத்தில் உள்ள இடிபாடுகளை அகற்றினால், கோயில் இருந்ததற்கான மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கும் என்று நீதிமன்றத்தில் இந்து தரப்பு வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் கோரியுள்ளார். மேலும் மசூதியின் ஒசுகானாவின் (முகம், கை, கால்களை சுத்தப்படுத்தும் தண்ணீர் உள்ள சிறிய குளம்) நடுவே சிவலிங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை எல்லாம் மசூதி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதுகுறித்து அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியின் இணை செயலாளர் ஒய்.எஸ்.யாசீன் கூறும்போது, ‘‘கள ஆய்வின் அறிக்கைகள் ஆதாரங்களல்ல என்பதை சட்டப்படி நீதிமன்றத்தில் நிரூபிப்போம். பாபர் மசூதி வழக்கில் இருந்து கியான்வாபி மசூதி விவகாரம் வேறுபட்டது. ஏனெனில், பாபர் மசூதியில் தொழுகை நடைபெறவில்லை. ஆனால், கியான்வாபி மசூதியில் அன்றாடம் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இது மசூதிதான் என்று கடந்த 1937-ல் வாரணாசி நீதிமன்றமும், 1942-ல் உத்தர பிரதேச உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன. எனவே, மத்திய அரசின் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன் படி மசூதியை மாற்ற முடியாது’’ என்று தெரிவித்தார்.
கியான்வாபி மசூதியானது அங்கிருந்த விஸ்வேஷ்வர் கோயிலை இடித்து கட்டப்பட்டதாகப் பல ஆண்டுகளாகப் புகார் உள்ளது. இதற்கு ஆதாரமாக மசூதியை ஒட்டியுள்ள கோயிலுக்குள் நந்தி சிலை காட்டப்படுகிறது. வழக்கமாக கருவறை அமைந்துள்ள திசையை நோக்கியபடி நந்தி சிலை அமைந்திருக்கும். ஆனால், கியான்வாபி மசூதியை நோக்கியபடி நந்தி சிலை உள்ளது.
இதற்கிடையில், எங்கள் கோயிலை இடித்துவிட்டுதான் கியான்வாபி மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஜெயினர்கள் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக கள ஆய்வு அறிக்கையில், மசூதியின் வடக்கிலுள்ள தூணில் பைரவர், தெற்கு தூணில் கணேஷ் உருவங்கள் பொறிக்கப்பட் டிருப்பதை ஜெயின மதத்தினர் காட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT